திரு.வி.க.நகர் மண்டலத்தில் ரூ.46.75 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப்பணிகள் - அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

திட்டப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர அலுவலர்களுக்கு சேகர்பாபு அறிவுறுத்தினார்.
சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி, இன்று (01.08.2025) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமானபி. கே. சேகர்பாபு, திரு.வி.க.நகர் மண்டலத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், வார்டு-69, முத்துகுமாரப்பா தெருவில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.13.47 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நவீன சமுதாய நலக்கூடத்தின் கட்டுமானப் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த சமுதாய நலக் கூடமானது, தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் 40,300 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது. தரைத்தளத்தில் 35 எண்ணிக்கையிலான நான்கு சக்கர வாகனங்கள், 50 எண்ணிக்கையிலான இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடம், முதல் தளத்தில் 435 இருக்கைகளுடன் உணவு அருந்தும் இடம், இரண்டாம் தளத்தில் 800 இருக்கைகளுடன் திருமண நிகழ்வு கூடம், மூன்றாம் தளத்தில் 10 எண்ணிக்கையிலான ஓய்வறைகளுடன் கட்டப்பட்டு வருகிறது.
தொடர்ந்து, சோமையா தெருவில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளியில் ரூ.2.75 கோடி மதிப்பீட்டில் 10 வகுப்பறைகளுடன் கட்டப்பட்டு வரும் கூடுதல் பள்ளிக் கட்டடம் மற்றும் ரூ.4.19 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டுமானப் பணி, ரங்கசாயி தெருவில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் பள்ளிக் கட்டடப் பணி மற்றும் இப்பள்ளியில் எதிரில் அமைந்துள்ள கால்பந்து மைதானத்தில் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணி, மார்க்கெட் தெருவில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.8.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் பள்ளிக் கட்டடப் பணி ஆகியவற்றினை அமைச்சர் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், வார்டு-67, பேப்பர் மில்ஸ் சாலையில் ரூ.4.82 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ரூ.9.68 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வார்டு அலுவலகம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை உரிய தொழில்நுட்ப வழிகாட்டுதல்களுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்திடும் வகையில் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, மேயர் ஆர். பிரியா, மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன், மத்திய வட்டார துணை ஆணையர் எச்.ஆர். கவுஷிக், மண்டலக் குழுத் தலைவர் மு. சரிதா மகேஷ்குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.