சென்னையில் லிவ்-இன் முறையில் வாழ்ந்த ஜோடி - அந்தரங்க வீடியோவை எடுத்துவைத்து மிரட்டிய காதலன் கைது

அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாக இளம்பெண்ணை சிராஜுல் இஸ்லாம் மிரட்டியுள்ளார்.
சென்னை,
சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர், திருவேற்காட்டை சேர்ந்த சிராஜுல் இஸ்லாம் என்ற இளைஞரை காதலித்து வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்யாமல் லிவ்-இன் முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் இளம்பெண்ணுக்கு சிராஜுல் இஸ்லாமின் நடவடிக்கை பிடிக்காததால், இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த பெண் லிவ்-இன் வாழ்க்கை முறையை கைவிட்டு பிரிந்து செல்லப் போவதாக கூறியுள்ளார். ஆனால், சிராஜுல் இஸ்லாம் அந்த பெண்னிடம், தாங்கள் இருவரும் நெருக்கமாக இருந்தபோது எடுத்துவைக்கப்பட்ட அந்தரங்க வீடியோக்களை காட்டி, அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.
இதனால் அதிரச்சியடைந்த இளம்பெண், இது குறித்து விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், சிராஜுல் இஸ்லாமை கைது செய்து, அவர் இளம்பெண்ணை மிரட்டுவதற்கு பயன்படுத்திய செல்போனை பறிமுதல் செய்தனர்.






