தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் 5½ சவரன் நகை பறிப்பு: தம்பதி கைது

திருச்செந்தூர் அருகே ஒரு பெண் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட பெண் ஒருவர் அந்த வீட்டிற்கு சென்று, உன் கணவர் உயிருக்கு ஆபத்து உள்ளது, அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே பரமன்குறிச்சி கஸ்பாவை சேர்ந்த நாகராஜ் மனைவி பகவதி. சம்பவத்தன்று பகவதி வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட ஒரு பெண் பகவதி வீட்டிற்கு சென்று, உன் கணவர் உயிருக்கு ஆபத்து உள்ளது. அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்றும், அதனால் உனக்கு குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
இதைக் கேட்ட அவர், அந்த பெண்ணை வீட்டிற்குள் அழைத்துள்ளார். அந்த பெண் கூறியவாறு ஒரு தம்ளர் தண்ணீரில் 5½ சவரன் தாலி சங்கிலியை கழற்றி போட்டுள்ளார். பின்னர் அந்தப் பெண் மந்திரம் சொல்வது போல் சொல்லிவிட்டு, பகவதியின் முகத்தில் குங்குமத்தை வீசி விட்டு, தம்ளரில் இருந்த 5½ சவரன் தாலி சங்கிலியுடன் வீட்டிலிருந்து தப்பி சென்று விட்டாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஏரல் அருகில் சூளைவாய்கால் பகுதியை சேர்ந்த விமலா (வயது 27), அவருக்கு உடந்தையாக இருந்த கணவர் விஜய்(28) ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்த அந்த 5½ சவரன் தாலி செயினையும் மீட்டனர்.