மதுரையில் போட்டியா? - பிரேமலதா விஜயகாந்த் பதில்

தே.மு.தி.க. அதிகாரப்பூர்வமாக யாருடனும் கூட்டணி பற்றி பேசவில்லை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
மதுரை,
மதுரையில் இன்று நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;
நாங்கள் எங்களுடைய நிலைப்பாட்டில் மிகவும் தெளிவாக இருக்கிறோம். எங்களுக்கான பூத் கமிட்டி அமைப்பது, தேர்தல் பணிகளை செய்வது, கேப்டனின் குரு பூஜை, மாநாடு ஆகியவைதான் எங்களுடைய ஒரே கவனம். ரத யாத்திரை மற்றும் எங்களுடைய கட்சி வளர்ச்சி ஆகியவற்றை பற்றி மட்டுமே கவனம் செலுத்துகிறோம். தமிழ்நாட்டில் உள்ள எல்லா கட்சிகளும் எங்களுக்கு தோழமை கட்சிகள்தான். யாரும் தோழமை இல்லை எனச் சொல்ல முடியாது.
தே.மு.தி.க. அதிகாரப்பூர்வமாக யாருடனும் கூட்டணி பற்றி பேசவில்லை. மாநாடு நடைபெறும்போது கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை வரும். அப்போது உறுதி செய்யப்படும். தே.மு.தி.க. சார்பில் உள்ளம் தேடி, இல்லம் நாடி மூன்றாம் கட்ட சுற்றுப்பயணத்தை மதுரையிலிருந்து தொடங்குகிறோம். வருகிற டிசம்பர் 2-ந்தேதி ஈரோட்டில் நிறைவு பெறும்.” என்றார்.
அப்போது, ‘மதுரை மத்திய தொகுதியில் போட்டியா?’ என்ற கேள்விக்கு “எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அந்தந்த மாவட்டத்தில் நான் போட்டியிட வேண்டும் என்பது மாவட்டச் செயலாளர்களின் விருப்பமாக உள்ளது. ஆனால், யார் எங்கு போட்டியிடப் போகிறார்கள் என்பதை இன்றைக்கு சொல்ல முடியாது.
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.






