சாலையில் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் அகற்றம்; ரூ.1 லட்சம் அபராதம் - சென்னை மாநகராட்சி


சாலையில் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் அகற்றம்; ரூ.1 லட்சம் அபராதம் - சென்னை மாநகராட்சி
x

கண்டெய்னரை மாநகராட்சி அலுவலர்கள் அப்புறப்படுத்தி, அந்நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை ஏற்படுத்தி மக்களுக்கு இடையூறு செய்தல், பொது இடங்களில் கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை சட்டவிரோதமாக கொட்டுதல், குப்பைகளை நிர்ணயிக்கப்படாத பொது இடங்களில் கொட்டுதல் உள்ளிட்ட விதிமீறல் நடவடிக்கைகளைகட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சியின் சார்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-118ல் தனியார் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்காக அந்நிறுவனத்தின் சார்பில் சாலையில் மக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னரை மாநகராட்சி அலுவலர்கள் அப்புறப்படுத்தி, மேற்கண்ட நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானம் குறித்த வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் மேற்கண்ட இடத்தில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதையொட்டி அந்நிறுவனத்திற்கு உரிய விதிகளின்படி ரூ.5 லட்சம் அபராதத்திற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமிப்புகள் மேற்கொள்வதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் தூய்மை மற்றும் பாதுகாப்பான கட்டுமானங்களை மேற்கொள்வதற்காக மாநகராட்சியால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றிடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story