கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - விசாரணையில் அதிர்ச்சி தகவல்

கோப்புப்படம்
உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை சேர்ந்த 17 வயது சிறுமி மதுரவாயலில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்து கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் உறவினரின் 14 வயது மகளை நவீன்குமார் (30 வயது) என்பவர் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று விட்டார். மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் 14 வயது சிறுமியை மீட்டனர். நவீன்குமாரை விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதையடுத்து மீட்கப்பட்ட மகளுடன் பெற்றோர் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டில் தங்கி இருந்து படித்து வந்த கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் விசாரணையில் உயிரிழந்த கல்லூரி மாணவி, உறவினரின் மகள் நவீன்குமாருடன் பேச செல்போன் கொடுத்து உதவியதால், தன்னை பெற்றோர் மற்றும் உறவினர்கள் தண்டிப்பார்கள் என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
மதுரவாயல் போலீசார் உயிரிழந்த கல்லூரி மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






