கோவை: வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டு யானை


கோவை: வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டு யானை
x

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் யானை உயிரிழந்து இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

கோவை,

கோவை அருகே உள்ள தடாகம் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இதுதவிர காட்டு பன்றிகள், காட்டெருமை, மான், சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகளும் உள்ளன. இது இடம்பெயர்ந்து செல்லும் காட்டு யானைகளின் சந்திப்பு பகுதி என்பதால் இங்கு காட்டு யானைகளின் நடமாட்டம் எப்போதுமே அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில் தடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் மலையடிவார பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அவர்கள் அங்குள்ள நாத்துக்காடு அருகே சென்றபோது அங்கு ஒரு ஆண் யானை உயிரிழந்து கிடந்தது. உடனே இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனச்சரக அதிகாரி திருமுருகன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அதற்குள் இருள் சூழ தொடங்கிவிட்டதாலும், அந்தப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாலும் பிரேத பரிசோதனை நடத்த முடியவில்லை.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, உயிரிழந்தது 30 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஆகும். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்து இருக்க வாய்ப்பு இருக்கிறது. இருந்தபோதிலும் பிரேத பரிசோதனையின் முடிவில்தான் முழு விவரமும் தெரியவரும் என்றனர்.

1 More update

Next Story