லண்டனில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பென்னிகுயிக் குடும்பத்தினர் சந்திப்பு

நேரில் அவர்கள் வைத்த கோரிக்கைகளையும் பரிசீலித்து நிறைவேற்றுவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸாலின் கூறியுள்ளார்.
சென்னை,
முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் ஸ்டாலின், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெர்மனியில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு தற்போது இங்கிலாந்தில் உள்ளார்.
இந்நிலையில் லண்டனில் இருந்து சென்னை புறப்படுவதற்கு முன்னதாக, முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக்கின் குடும்பத்தினர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர்.
இது தொடர்பாக அவர் ' எக்ஸ் ' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,
முல்லை பெரியாறு அணையைத் தந்து நம் மக்களின் மனங்களில் நிறைந்து வாழும் கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலையை, அவரது சொந்த ஊரான கேம்பர்ளி நகரில் நிறுவியதற்காக, அவரது குடும்பத்தினரும் - செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தைச் சார்ந்தவர்களும் நன்றி தெரிவித்தனர். நேரில் அவர்கள் வைத்த கோரிக்கைகளையும் பரிசீலித்து நிறைவேற்றுவோம். வாழ்க JohnPennyCuick அவர்களது புகழ்! என அதில் பதிவிட்டுள்ளார்.
ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களால் 1893ஆம் ஆண்டு முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டது. மேலும், தமிழகத்திற்கு கிழக்கு நோக்கி தண்ணீரை அனுப்பும் ஒப்பந்தத்தையும் பெற்றுத்தந்தார் பென்னிகுவிக். முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகள் அனைத்தும் தமிழக அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. அணையின் கட்டுமானப் பணிகள் 1887 ஆம் ஆண்டு தொடங்கி 1893 ஆம் ஆண்டு நிறைவடைந்தன.