பல்கலைக்கழகங்களின் வேந்தராகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை,
மசோதாக்கள், துணைவேந்தர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் கவர்னருக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த ரிட் மனு மீது சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:-
தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக எடுத்துக்கொள்ளப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டுக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டப்பிரிவு 142-ன் படி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதாவது, தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்கள் மீது கவர்னர் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுகின்றன. இந்த மசோதாக்கள் கவர்னரிடம் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து அங்கீகரிக்கப்பட்டதாகக் கருத்தில் கொள்ளப்படும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டத் திருத்த (2-வது) மசோதா உட்பட 10 மசோதாக்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் அளித்திருப்பதால் கவர்னருக்கு பதிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இனி பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவிகளில் இருந்து கவர்னர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.