பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா 27 ஆண்டுகளுக்குப்பின் நேற்று நடைபெற்றது. இந்த திருவிழாவில் 18 கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்துகொண்டனர்.
விழாவின்போது நேற்று சாமி திருக்கல்யாண நிகழ்ச்சிக்கான சீர் வரிசை பொருட்களை ஊர்வலமாக கொண்டு சென்றபோது பட்டாசு வெடிக்கப்பட்டது. அப்போது, பைக்கில் மூட்டையில் கொண்டு செல்லப்பட்ட பட்டாசு மீது தீப்பொறி விழுந்தது. இதில் பட்டாசுகள் வெடித்து சிதறின. இந்த சம்பவத்தில் செல்வராஜ் (வயது 29), தமிழ்செல்வன் (வயது 11), கார்த்தி (வயது 11) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.மேலும், உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.