சென்னை - ஐதராபாத் புல்லெட் ரெயில் திட்டம்: 12 மணி நேர பயணம் 2.20 மணி நேரமாக குறையும்


சென்னை - ஐதராபாத் புல்லெட் ரெயில் திட்டம்: 12 மணி நேர பயணம் 2.20 மணி நேரமாக குறையும்
x

2029-ம் ஆண்டு முழுவதுமாகவும் இந்த வழித்தடத்தில் புல்லெட் ரெயில் சேவை தொடங்க இருக்கிறது.

சென்னை,

உலக அளவில் வளர்ந்த நாடுகளில் அதிவேக புல்லெட் ரெயில் சேவை இருக்கிறது. அந்த வகையில், ஜப்பான், சீனா, தென் கொரியா, இத்தாலி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் புல்லெட் ரெயில் சேவை உள்ளது.

வளர்ந்து வரும் நாடான இந்தியாவிலும் புல்லெட் ரெயில் திட்டம் மராட்டிய மாநிலம் மும்பை - குஜராத் மாநிலம் அகமதாபாத் இடையே செயல்படுத்தப்பட்டு வருகிறது. வரும் 2027-ம் ஆண்டு சூரத் - வாபி இடையேயும், 2029-ம் ஆண்டு முழுவதுமாகவும் இந்த வழித்தடத்தில் புல்லெட் ரெயில் சேவை தொடங்க இருக்கிறது.

இதேபோல், தென்மாநிலங்களில் 2 வழித்தடத்தில் புல்லெட் ரெயில் சேவை தொடங்குவது குறித்து சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகிறது. சென்னை - பெங்களூரு - மைசூரு வழித்தடத்தில் புல்லெட் ரெயில் திட்டம் செயல்படுத்துவது குறித்து நிலம் அளவீட்டு பணி நடந்து வருகிறது.

மேலும், சென்னை - ஐதராபாத் இடையே 778 கிலோ மீட்டர் தூரத்திற்கு புல்லெட் ரெயில் திட்டத்தை தொடங்கவும் தென் மத்திய ரெயில்வே திட்ட அறிக்கையை தயாரித்து வந்தது. சென்னையில் இருந்து கூடூர் வழியாக முதலில் ஐதராத்துக்கு புல்லெட் ரெயில் சேவையை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், தமிழக அரசு திருப்பதி வழியாக புல்லெட் ரெயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தென் மத்திய ரெயில்வேயிடம் ஏற்கனவே கோரிக்கை வைத்தது. அதன்படி, வழித்தடத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, இறுதி வழித்தட விவரங்களை விரிவான அறிக்கையாக தயாரித்து தமிழக அரசிடம் தென் மத்திய ரெயில்வே வழங்கியுள்ளது. கொள்கை ரீதியில் ஒப்புதல் பெறப்பட்டால், சென்னை - ஹைதராபாத் புல்லெட் ரெயில் திட்டம் உறுதி செய்யப்பட்டுவிடும். நிலம் கையகப்படுத்தும் பணியும் தொடங்கிவிடும்.

தற்போதைய நிலையில், தமிழக அரசின் கன்சல்டன்சி நிறுவனமான ரிட்ஸ், தமிழகத்தில் புல்லெட் ரெயில் திட்டத்திற்கு 223.44 ஹெக்டேர் நிலம் தேவைப்படும் என்று அறிக்கை அளித்துள்ளது. மேலும்,65 சாலைகளையும், 21 உயர் மின்னழுத்த வழித்தடத்தையும் கடந்து செல்ல வேண்டியது இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னை சென்டிரல், மீஞ்சூர் அருகே உள்ள சென்னை வெளிவட்ட சாலை பகுதியிலும் 2 புல்லெட் ரெயில் நிலையங்கள் அமைக்கப்படும் என கூறப்படுகிறது. இதற்காக அப்பகுதியில் தலா 50 ஏக்கர் நிலம் தேவைப்படும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. சென்னை - ஹைதராபாத் புல்லெட் ரெயில் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், தற்போதைய 12 மணி நேர பயணம் 2.20 மணி நேரமாக குறைந்துவிடும்.

1 More update

Next Story