அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு உத்தரவு

சூரியமூர்த்தியின் வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார்
சென்னை,
அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில், அதிமுக தொண்டர் எனக் கூறி திண்டுக்கலைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
அதில், “அதிமுக விதிகளின்படி பொதுச்செயலாளரை உறுப்பினர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், எடப்பாடி பழனிசாமி அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படவில்லை. பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதால், அவரது தேர்வு செல்லாது என்று அறிவிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு உரிமையியல் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, இந்த சூரியமூர்த்தியின் வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார். ஆனால், இந்த வழக்கை உரிமையியல் கோர்ட்டு கடந்த ஜூலை மாதம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், எடப்பாடி பழனிசாமி மேல்முறையிட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை நீதிபதி பி.பி.பாலாஜி விசாரித்தார். விசாரணையின் போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில், 2018-ம் ஆண்டிலிருந்து சூர்ய மூர்த்தி கட்சியின் உறுப்பினராக இல்லை. கட்சியில் உறுப்பினராக இல்லாத ஒருவர் கட்சி விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப முடியாது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளரை எதிர்த்து சூர்ய மூர்த்தி போட்டியிட்டதாக வாதிடப்பட்டது.
சூர்ய மூர்த்தி தரப்பில், கட்சி விதிப்படி சூரியமூர்த்தி, கட்சியின் உறுப்பினராக தொடர்கிறார். பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் விருப்பத்தை மீறி கட்சி விதியில் மாற்றம் செய்யப்பட்டது. பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கட்சி விதியை மாற்ற முடியாது என வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார்.
இன்று, இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி பாலாஜி, எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்று, சூரியமூர்த்தியின் வழக்கை நிராகரிக்க மறுத்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
அதேபோல, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி தாக்கல் செய்திருந்த வழக்கையும் நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.