ஆற்றுப்பால தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் நின்ற பஸ்.! உயிர்தப்பிய ஐயப்ப பக்தர்கள்

பஸ் ஆற்றுக்குள் கவிழாமல் அப்படியே நின்றுவிட்டதால், லேசான காயங்களுடன் ஐயப்ப பக்தர்கள் உயர் தப்பினர்.
கடலூர்,
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா கண்ணனூர் கிராமத்திலிருந்து சபாிமலை அய்யப்பனை வேண்டி பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினார்கள்.
இதை தொடர்ந்து சபரி மலைக்கு செல்வதற்காக தங்களது பயணத்தை அவர்கள் தொடங்கினார்கள். அதன்படி, குருசாமி வெங்கடேஷ் என்பவர் தலைமையில் ஒரு பெண் பக்தர் உள்பட 40 பேர் நேற்று முன்தினம் இரவு ஒரு பஸ்சில் புறப்பட்டனர். பஸ்சை ராஜேஷ் என்பவர் ஓட்டினார்.
பஸ் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த முட்லூர் வெள்ளாற்று பாலம் அருகே நேற்று அதிகாலை 5.30 மணியளவில் வந்து கொண்டிருந்தது.
அப்போது, திடீரென டிரைவர் ராஜேஷின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் வெள்ளாற்று பாலத்தின் இடது புறத்தில் உள்ள தடுப்பு சுவரின் மீது மோதி நின்றது. இதில் தடுப்பு சுவர் மீது ஏறியபடி நின்றதால், பஸ்சின் இடதுபுறம் அந்தரத்தில் தொங்குவது போன்று பஸ் நின்று கொண்டிருந்தது.
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடோடி வந்து, விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்களை டிரைவர் இருக்கை வழி மற்றும் அவசர கால கதவு வழியாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அவர்களில் 18 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு இருந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரும், அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
அதிர்ஷ்டவசமாக பாலம் தொடங்கும் பகுதியில் பக்கவாட்டு சுவரில் மோதிய பஸ் அப்படியே நின்றுவிட்டது, இல்லையேல் ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்து பெரும் விபத்தாகி இருக்கும். 2 கிரேன்கள் வரவழைக்கப்பட்டு, விபத்தில் சிக்கிய பஸ்சை போலீசார் மீட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






