உல்லாசத்துக்கு இடையூறு: பெண் குழந்தை கொடூரக்கொலை; தாய்-3 வாலிபர்கள் அதிரடி கைது


உல்லாசத்துக்கு இடையூறு: பெண் குழந்தை கொடூரக்கொலை; தாய்-3 வாலிபர்கள் அதிரடி கைது
x
தினத்தந்தி 26 April 2025 5:45 AM IST (Updated: 26 April 2025 5:46 AM IST)
t-max-icont-min-icon

குளம் பகுதியில் உள்ள வாழைத்தோட்டத்தில் மது அருந்திவிட்டு பிருந்தாவுடன் 3 பேரும் உல்லாசமாக இருந்தனர்.

திசையன்விளை,

திசையன்விளை அருகே பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்த வழக்கில் துப்பு துலங்கியது. உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை கொடூரமாக கொன்றதாக தாய்-3 வாலிபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மகாதேவன்குளத்தைச் சேர்ந்தவர் சரத். இவரது சொந்த ஊர் இட்டமொழி அருகே உள்ள அழகப்பபுரம். இவர் கோவையில் ஒரு கடையில் வேலை செய்து வருகிறார்.

இவருடைய மனைவி பிருந்தா (வயது 24). வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த இவர்கள் காதலித்து கலப்பு திருமணம் செய்தனர். இவர்களுக்கு தர்ஷினி என்ற 2½ வயது பெண் குழந்தை உண்டு.

கடந்த 23-ந் தேதி இரவு பிருந்தா தனது குழந்தையை தூக்கிக்கொண்டு பக்கத்து ஊரான தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா நடுவக்குறிச்சியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். அங்கு குழந்தை கட்டிலில் இருந்து கீழே விழுந்து விட்டதாக கூறி தூங்க வைத்துள்ளார்.

நேற்று முன்தினம் காலையில் வெகுநேரம் ஆகியும் குழந்தை கண் விழிக்கவில்லை. இதனால் குழந்தையை பிருந்தாவும், அவரது தாயாரும் சிகிச்சைக்காக திசையன்விளை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், குழந்தை தர்ஷினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். மேலும், குழந்தையின் உதட்டில் ரத்தக்காயமும் இருந்தது.

எனவே, சந்தேகமடைந்த உறவினர்கள் இதுகுறித்து திசையன்விளை போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். போலீசார் விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த மர்ம சாவு குறித்து தாய் பிருந்தாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் துப்பு துலங்கியது. அதாவது, தாயின் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் குழந்தை தர்ஷினி கொடூரமாக கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது. பிருந்தாவிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த பரபரப்பு தகவல்கள் வருமாறு:-

பிருந்தாவுக்கும், இட்டமொழி அருகே உள்ள துவரம்பாடு ஊரைச் சேர்ந்த சுயம்புத்துரை மகன் லிங்கசெல்வனுக்கும் (29) பழக்கம் இருந்துள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. திருமணமான லிங்கசெல்வன், மன்னார்புரத்தில் இருந்து திசையன்விளை செல்லும் சாலையில் உள்ள வாழைத்தோட்டம் மெயின்ரோட்டில் ஐஸ்கிரீம் கடை வைத்துள்ளார்.

கடந்த 23-ந் தேதி இரவு லிங்கசெல்வன் மற்றும் அவருடைய நண்பர்களான துவரம்பாட்டைச் சேர்ந்த சுடலை மகன் முத்துச்சுடர் (28), லிங்கம் மகன் பெஞ்சமின் (25) ஆகியோர் மோட்டார் சைக்கிள்களில் பிருந்தாவின் வீட்டிற்கு சென்றனர்.அங்கிருந்த பிருந்தாவையும், குழந்தை தர்ஷினியையும் மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள குளம் பகுதிக்கு சென்றனர். அங்கு மது அருந்திவிட்டு பிருந்தாவுடன் 3 பேரும் உல்லாசமாக இருந்தனர்.

அப்போது குழந்தை தண்ணீர் வேண்டும் என்று கேட்டுள்ளது. போதையில் இருந்த வாலிபர்கள், குழந்தை என்றும் பாராமல் குளிர்பானத்தில் கலக்கப்பட்ட மதுவை கொடுத்தனர். அதை குடித்த குழந்தை அழுதுள்ளது.

எனவே, தங்கள் உல்லாசத்துக்கு இடையூறாக இருக்குமோ என்ற ஆத்திரத்தில் குழந்தையின் வாயை பொத்தி அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மயக்கமடைந்த குழந்தையை 2 வாலிபர்கள் தூக்கிக்கொண்டு வந்து ஐஸ்கிரீம் கடையில் படுக்க வைத்துவிட்டு மீண்டும் பிருந்தாவுடன் உல்லாசமாக இருந்துள்ளனர்.

பின்னர் நள்ளிரவில் ஐஸ்கிரீம் கடைக்கு வந்து மூச்சுப்பேச்சு இல்லாமல் கிடந்த குழந்தையை தூக்கி பிருந்தாவிடம் கொடுத்துவிட்டு அவர்கள் 3 பேரும் சென்றுவிட்டனர். என்ன செய்வதென்று தெரியாமல் தாய் வீட்டிற்கு சென்ற பிருந்தா, தனது குழந்தை கட்டிலில் இருந்து கீழே விழுந்து மயங்கி விட்டதாக கூறி நாடகமாடியது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த கொடூரக்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து பிருந்தா, லிங்கசெல்வன், முத்துச்சுடர், பெஞ்சமின் ஆகிய 4 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தாயின் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த பெண் குழந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story