செல்போன் பார்த்ததை கண்டித்த அண்ணன்... வாலிபர் எடுத்த விபரீத முடிவு

கோப்புப்படம்
செல்போன் பார்த்ததை அண்ணன் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த காளசமுத்திரம் கிராமம் கிழக்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மகன் சதீஷ்குமார் (31 வயது). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணி மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது தம்பி சுரேஷ்குமார் (26 வயது). இவர் சின்னசேலம் அடுத்த தோட்டப்பாடி கிராமத்தில் உள்ள தனியார் கியாஸ் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டில் வளர்த்து வரும் பசுமாட்டிடம் கறந்த பாலை சொசைட்டிக்கு எடுத்து செல்லாமல் சுரேஷ்குமார் செல்போனை பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். இதை பார்த்த சதீஷ்குமார் பாலை சொசைட்டிக்கு எடுத்துச்செல்லாமல் ஏன் செல்போன் பார்த்துக்கொண்டிருக்கிறாய்? என்று கண்டித்துள்ளார். பின்னர், அவரே பாலை சொசைட்டிக்கு எடுத்துச்சென்றுவிட்டார்.
அண்ணன் திட்டியதில் மனமுடைந்த சுரேஷ்குமார் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் தூக்குப்போட்டுக்கொண்டார். இதற்கிடையே சொசைட்டிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய சதீஷ்குமார், தம்பி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உடனே அவரை மீட்டு சின்னசேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே சுரேஷ்குமார் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கீழ்குப்பம் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






