தூத்துக்குடி மாநகராட்சி வாகன காப்பகத்தில் பைக் திருட்டு: மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடி மாநகராட்சி வாகன காப்பகத்தில் ஒருவர் பைக்கை நிறுத்திவிட்டு, அடுத்த நாள் சென்று பார்த்தபோது பைக்கை காணவில்லை.
தூத்துக்குடி வண்ணார் முதல் தெருவை சேர்ந்த காந்திமதிநாதன் மகன் சரவணகுமார் (வயது 41). இவர் கடந்த 16-ம் தேதி இரவில் தன்னுடைய இருசக்கர வாகனத்தை தூத்துக்குடி பழைய பேருந்து நிறுத்தத்தில் உள்ள மாநகராட்சி சார்பில் நடத்தப்படுகின்ற வாகன காப்பகத்தில் நிறுத்தியுள்ளார். மறுநாள் 17ம் தேதி தன்னுடைய இருசக்கர வாகனத்தை சரவணகுமார் சென்று பார்த்த போது வாகனம் காணவில்லை.
இது தொடர்பாக அங்கு பணியில் உள்ள மாநகராட்சி பணியாளர்களை கேட்டபோது எந்த ஒரு பதிலும் அவர்கள் கூறவில்லை. அங்கு உள்ள சிசிடிவி கேமரா பதிவை பார்த்தபோது ஒருவர் அந்த காணாமல் போன இருசக்கர வாகனத்தை மாநகராட்சி வாகன காப்பகத்தில் இருந்து எடுத்துச் செல்லும் காட்சி வெளியாகி உள்ளது. இதனையடுத்து சரவணக்குமார் மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் மாநகராட்சி வாகன காப்பகத்தில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் திருட்டு போவதாகவும் புகார் கூறப்படுகிறது. அங்கு சரியான முறையில் பணியாளர்கள், செக்யூரிட்டிகள் இல்லை என்ற குற்றச்சாட்டும் வாகனத்தை விடுகின்ற இருசக்கர வாகன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆகையால் மாநகராட்சி நிர்வாகம் வரும் காலங்களில் இருசக்கர வாகனங்கள் திருட்டு போகாத வகையில் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






