தமிழக வாக்காளர்களாகும் பீகார் மாநிலத்தினர்... அதிர்ச்சி தகவல்கள்


தமிழக வாக்காளர்களாகும் பீகார் மாநிலத்தினர்... அதிர்ச்சி தகவல்கள்
x
தினத்தந்தி 1 Aug 2025 11:56 AM IST (Updated: 1 Aug 2025 4:38 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்திலும் விரைவில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி தொடங்க உள்ளது.

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்

பீகார் மாநில சட்டசபை தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை செய்தனர். தேர்தல் அலுவலர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர்கள் அந்த முகவரியில் குடியிருக்கிறார்களா என்று ஆய்வு செய்தார்கள். மேலும் அவர்களிடம் படிவம் கொடுத்து பூர்த்தி செய்து திரும்ப பெற்றார்கள்.

அதில் 2003-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் சேர்ந்தவர்கள் தங்களது இந்திய குடியுரிமைக்கான பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 11 வகை ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த ஆவணங்களில் ஆதார், ரேஷன் கார்டு போன்றவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி இருந்தாலும், அதனை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது.

பீகார் மாநிலத்தில் நடந்து வந்த சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கடந்த 26-ந்தேதி நிறைவு பெற்றது. பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருந்த 7 கோடியே 89 லட்சத்து 69 ஆயிரத்து 844 வாக்காளர்களில் 7 கோடியே 24 லட்சம் பேர், தங்களது விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து, சமர்ப்பித்து விட்டனர். இது 91.69 சதவீதம் ஆகும்.

இந்த பணியின்போது வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருந்த 22 லட்சம் பேர் உயிரிழந்து இருப்பது தெரியவந்தது. 7 லட்சம் வாக்காளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்து உள்ளதும், 36 லட்சம் பேர் பீகாரில் இருந்து நிரந்தரமாக வேறு மாநிலங்களுக்கு இடம்மாறி உள்ளதும் தெரியவந்துள்ளது.

65 லட்சம் பேர் நீக்கம்

இதன் அடிப்படையில் 65 லட்சம் பேர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்படவுள்ளது. அதில் பெயர்கள் இல்லாதவர்கள் தங்களது பெயரை சேர்க்க செப்டம்பர் மாதம் 1-ந்தேதி வரை ஒருமாத காலம் அவகாசம் தரப்படும். அதன்பின் தான் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அந்த அடிப்படையில் தான் வருகிற நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறும்.

இருக்கும் இடத்தில்தான் வாக்களிக்க வேண்டும்

இதுகுறித்து இந்திய தலைமை தேர்தல் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

அரசியலமைப்பு சட்டப்படி ஒருவர் எந்த தொகுதியில் வசிக்கிறாரோ அந்த தொகுதியில் தான் அவர் வாக்களிக்க தகுதி உடையவராகிறார். அதேபோல் இந்திய குடிமகன்கள் மட்டுமே வாக்களிக்க தகுதி பெற்றவர். இந்த அடிப்படையில் தான் பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடைபெற்றது.

தற்போது பீகாரில் இருந்து வெளி மாநிலங்களுக்கு குடி பெயர்ந்தவர்கள் பெயர்கள் அங்குள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அவர்கள் எந்த மாநிலத்தில் தொகுதிக்குட்பட்ட பகுதியில் வசிக்கிறார்களோ?, அங்கு அந்த வாக்காளர் தனது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் இருக்கும் 6½ லட்சம் பீகார் மாநிலத்தவர்

தேர்தல் ஆணையத்தின் கணக்கீட்டின்படி 36 லட்சம் வாக்காளர்கள் நிரந்தரமாக பீகாரில் இருந்து வேறு மாநிலங்களுக்கு இடம் மாறி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் தென்மாநிலங்களான தமிழகம், கர்நாடகா, ஆந்திராவில் தான் வேலைக்கு வந்து தங்கி உள்ளனர். எனவே இவர்கள் அனைவரும் தாங்கள் தற்போது வசிக்கும் மாநிலத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்து கொள்ளலாம்.

இந்த அடிப்படையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுமார் 6½ லட்சம் பேர் தமிழகத்தில் வேலைக்காக வந்து தங்கி இருக்கிறார்கள். இவர்களது பெயர்கள் பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதால், இனி அவர்கள் தங்களது பெயரை தமிழகத்தின் வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ளலாம். இதில் சென்னையில் மட்டும் 3½ லட்சம் பீகார் மாநிலத்தவர் இருப்பார்கள். இது தவிர கோவை, திருப்பூரிலும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

தமிழகத்திலும் விரைவில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி தொடங்க உள்ளது. அப்போது தமிழகத்தில் வசிக்கும் பீகார் மாநிலத்தவர்கள், தங்களது பெயர்களை தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மனு அளிப்பார்கள். இவர்களது மனு ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களிக்கும் தகுதியை பெறுவார்கள்.

நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் மற்ற மாநிலங்களிலும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை மேற்கொள்ளும்போது, தமிழகத்தில் வேலை செய்யும் வெளிமாநிலத்தவர்கள் பெயர்கள் அவர்களது சொந்த மாநிலங்களில் உள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு நடந்தால் தமிழக வாக்காளர் பட்டியலில் வெளி மாநிலத்தவர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். அதே போல் தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களின் பெயர்கள், தமிழக வாக்காளர் பட்டியிலில் இருந்து நீக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின்படி தமிழகத்தில் 34 லட்சத்து 87 ஆயிரத்து 974 வெளிமாநிலத்தவர்கள் வேலைக்கு வந்து தங்கி உள்ளனர். இந்த எண்ணிக்கை இப்போது இரட்டிப்பாகி இருக்கும் என்று நம்பப்படுகிறது. நாடு முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் முடிந்து விட்டால், தமிழகத்தில் தற்போது உள்ள வெளிமாநிலத்தை சேர்ந்த சுமார் 70 லட்சம் பேர் தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து வாக்களிக்கும் நிலை உருவாகலாம். அந்த எண்ணிக்கை தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் சுமார் 10 சதவீதத்திற்கும் அதிகம் ஆகும்.

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

இவ்வாறு பிற மாநில வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு, தமிழக தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வெளிமாநிலத்தவர் எண்ணிக்கை அதிகரிப்பு எந்த விதமான விளைவை ஏற்படுத்தும் என்பதையும் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

1 More update

Next Story