இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள், 2 லோடு வாகனங்கள் பறிமுதல்: 2 பேர் சிக்கினர்

தூத்துக்குடி மாவட்டம் பட்டினமருதூர் கடற்கரை பகுதியில் கியூ பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதிகள் மூலமாக பீடி இலைகள், மருந்து பொருட்கள், உரம் உள்ளிட்ட பொருட்கள் அடிக்கடி இலங்கைக்கு கடத்திச் செல்லும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. எனவே இதுபோன்ற கடத்தல் சம்பவங்களை நடைபெறாமல் தடுக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் உட்கோட்டம், தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பட்டினமருதூர் பகுதியில் கியூ பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கே ஒரு மீன் கம்பெனி பின்புறம் உள்ள கடற்கரையில் இருந்து பீடி இலை மூட்டைகளை இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக 2 மினி லோடு வாகனங்கள் இருப்பது தெரியவந்தது. அந்த வாகனங்களை பரிசோதனை ெசய்தபோது அதில் சுமார் 30 கிலோ எடை கொண்ட 13 மூட்டைகளில் பீடி இலைகள் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.15 லட்சம் ஆகும்.
இதனையடுத்து பீடி இலைகளை பறிமுதல் செய்த கியூ பிரிவு போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய 2 லோடு வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த வாகனங்களின் ஓட்டுநர்களான மதுரை மாவட்டம் அவனியாபுரம், வல்லானந்தபுரத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் உமைய ராஜா (வயது 31), ராமநாதபுரம் மாவட்டம், பனைக்குளம், மேற்கு தெருவைச் சேர்ந்த சீனி நைனா முகமது மகன் ஹபிபு ரஹ்மான்(38) ஆகிய 2 பேர் சிக்கியுள்ளனர். இதனையடுத்து பறிமுதல் செய்த பீடி இலைகள், லோடு வாகனங்கள் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரையும் தூத்துக்குடி சுங்கத்துறையினர் வசம் ஒப்படைக்க கியூ பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.






