ஜூனியர் ஆக்கி உலக கோப்பை வரவேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்த அருள் எம்.எல்.ஏ.

விளையாட்டுத்துறை சார்பில் நடக்கும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் முறையாக அழைப்பு விடுப்பது இல்லை என்று அருள் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
சேலம்,
ஜூனியர் ஆக்கி உலக கோப்பை வரவேற்பு நிகழ்ச்சி சேலத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சேலம் மேற்கு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ.வான அருள் வந்தார். அப்போது அவர் அங்கிருந்த மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சனிடம், நிகழ்ச்சியில் பங்கேற்க எம்.எல்.ஏ.வாக இருக்கும் எனக்கு ஏன் முறையாக அழைப்பு விடுக்கவில்லை எனக்கூறி அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுபற்றி அறிந்த விழா ஏற்பாட்டாளர்கள் அங்கு வந்து அருள் எம்.எல்.ஏ.வை சமாதானப்படுத்தினர். அதற்கு விளையாட்டுத்துறை சார்பில் நடக்கும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் முறையாக அழைப்பு விடுப்பது இல்லை என்று அதிகாரிகள் மீது அவர் குற்றச்சாட்டு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அமைச்சர் ராஜேந்திரன் பங்கேற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்காமல் அருள் எம்.எல்.ஏ. புறக்கணித்து தனது காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






