தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகள்; மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தொழிலாளர்களின் சட்டபூர்வ உரிமைகளை மறுக்கும் அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டும் வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“தொழிலாளர்கள் வரலாற்றில் நூறாண்டுகளுக்கும் மேலாக, உரிமைப் போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக காலனி ஆட்சி காலத்திலும், விடுதலை பெற்ற பிறகும் தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்கும் 44 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த சட்டங்களில் 15 சட்டங்களை முழுமையாக ரத்து செய்துவிட்டு 29 சட்டங்களை திருத்தி, சுருக்கி நான்கு சட்டத் தொகுப்புகளாக மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு முன்பு சட்டங்கள் நிறைவேற்றியது.
தொழிலாளர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அமலாக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, அந்த சட்டங்களை, திடீரென இன்று (21.11.2025) முதல் அமல்படுத்தப் போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏதோ தொழிலாளர் நலன்களை காப்பதற்காக கொண்டு வருவது போன்ற ஆரவார முழக்கத்துடன் சட்டங்களை அமலாக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சட்டங்கள், உண்மையில் தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை ஆகும்.
முதலில், இனி சட்ட உரிமைகள் பெற்ற நிரந்தர தொழிலாளர்கள் எங்கும் இருக்க மாட்டார்கள் என்பதை இச்சட்டங்கள் உறுதிப்படுத்துகின்றன. சில வாரங்கள் அல்லது மாதங்கள் வேலைக்கு வைத்துவிட்டு, எந்த நேரத்திலும் எந்தக் காரணமும் இல்லாமல் வேலையளிப்போர், தொழிலாளர்களை வேலையில் இருந்து வெளியேற்ற இச்சட்டங்கள் வழி வகுக்கின்றன.
தொழிலாளர்கள் சங்கமாக சேரும் உரிமை, கூட்டாக வேலையளிப்பவரிடம் கோரிக்கை வைக்கும் உரிமை, பேரம் பேசும் உரிமை ஆகியவை சட்ட ரீதியாக பறிக்கப்படுகின்றன. தொழிலாளர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்டிருந்த பணிப் பாதுகாப்பு, ஊதியப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை இந்தச் சட்டங்கள் மறுக்கின்றன.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாக வார்த்தை அளவில் இச்சட்டங்களில் பேசினாலும், அவை எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது பற்றி, இந்த சட்ட தொகுப்புகளில் எதுவும் சொல்லப்படவில்லை. அதற்கான நிதியும் ஒதுக்கீடும் இல்லை.
சட்ட விதிகளின்படி தொழில் நடத்தப்படுகிறதா என்பதை அரசு ஆய்வு செய்யும் முறை தளர்த்தப்பட்டு, சட்ட விதிகள் அமலாக்கப்படுகின்றன என்று முதலாளிகளே தமக்கு தாமே சான்றிதழ் வழங்கிக் கொள்ள இச்சட்டம் அதிகாரம் வழங்குகிறது.
தொழில் நடத்துவதை எளிமைப்படுத்துதல் என்ற பெயரில், தொழிலாளர்களை அளவற்ற முறையில் சுரண்டுவதற்கான முழு சுதந்திரத்தை இவை முதலாளிகளுக்கு வழங்குகின்றன. தொழிலாளர்களுக்கு விரோதமான இந்த சட்டங்களை, கார்ப்பரேட் அழுத்தங்களுக்கு அடி பணிந்து தன்னிச்சையாக மத்திய அரசு திடீரென செயலுக்கு கொண்டு வந்திருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
தொழிலாளர்களின் சட்டபூர்வ உரிமைகளை மறுக்கும் அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






