ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணு நடத்தி வந்த 'பரம்பொருள் அறக்கட்டளையை' மூடுவதாக அறிவிப்பு

கோப்புப்படம்
அறக்கட்டளைக்கு இனி எவ்வித நன்கொடையும் அனுப்ப வேண்டாம் என்றும், இனி அறக்கட்டளை இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைதான ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணு, திருப்பூரில் தான் நடத்தி வந்த பரம்பொருள் அறக்கட்டளையை மூடுவதாக அறிவித்துள்ளார். மேலும் அறக்கட்டளைக்கு இனி எவ்வித பணமும் அனுப்ப வேண்டாம் என்றும் அந்த கட்டமைப்பு இனி இயங்காது என்றும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
என் உயிரும், உள்ளமும் கலந்த பரம்பொருள் அறக்கட்டளையை முடிவுக்கு கொண்டு வருகிறேன் என்ற இந்த வார்த்தைகளை எழுதும்போது, என் உள்ளத்தில் நிம்மதி மட்டுமே இருக்கிறது. இது வேதனை கொண்ட முடிவு அல்ல, என் சொந்த ஆன்மீக வளர்ச்சியை கருத்தில் கொண்டு எடுத்த ஒரு தெளிவான தீர்மானம்.
கடந்த பல வருடங்களாக பரம்பொருள் அறக்கட்டளை இறை அருளால் என் வழியாகப் பெரும்பாலும் இயற்கையாகவே உருவாகி, லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியது. அந்த மாற்றங்களின் பின்னால் நான் இல்லை; பரம்பொருள் (இறைவன்) மட்டுமே இருந்தது. அதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
இப்போது, நான் ஒரு புதிய புள்ளியை அடைந்திருக்கிறேன். என் உள்ளத்தின் மவுனம், அமைதி மற்றும் பரிபூரண நிலை என்னை எல்லா வெளியிலான கட்டமைப்புகளிலிருந்தும் விலகச் சொல்கிறது. நான் ஒரு அமைப்பின் தலைவராக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை எனக் கருதுகிறேன்.
"உண்மையான அருள் அமைப்பில்லாமலே இயங்குகிறது" அதனால், நான் எந்த ஒரு நெருக்கடியாலும் அல்லாமல், எந்த ஒரு வெளிப்பட்ட காரணத்தாலும் அல்லாமல், என் சொந்த ஆன்மீக வளர்ச்சிக்காக (சுயநலம் சார்ந்து), பரம்பொருள் அறக்கட்டளையை மூடுகிறேன். இனிமேல் பரம்பொருள் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கிற்கு எந்தவிதமான பணமும் அனுப்ப வேண்டாம். அந்த கட்டமைப்பு இனி இயங்காது. உங்கள் அன்பும், நம்பிக்கையும் நான் உள்ளத்தில் உணர்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.