“நானும் அண்ணாமலையும் இன்னும் ஒரு ஆட்டம் ஆடப்போகிறோம்...” - நயினார் நாகேந்திரன்

பெயரில் தான் 'விடியல்'.. ஆனால், மக்களின் வாழ்க்கையிலோ இன்னும் இருட்டு தான் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
கோவை,
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ளது. அரசியல் கட்சிகள் தங்களின் பரபரப்பான தேர்தல் வியூகங்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கிவிட்டனர்.
சட்டமன்ற தேர்தலில் இந்தமுறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என்று 4 முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு நடைபெற்ற அதே நாளில், பாஜக பொதுக்கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதில் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர் வள்ளி கும்மி நடனம் ஆடினார்கள்.
இந்நிலையில் கோவை தெற்கு மாவட்ட மாநாட்டில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:-
திரும்புமிடமெல்லாம் எம்பெருமான் முருகனின் கோவில்களையும், இயற்கை அன்னையின் செல்லப்பிள்ளைகளான மலைப் பிரதேசங்களையும் தன்னகத்தே கொண்ட கோயம்புத்தூர் மண்ணில் நமது இன்றைய பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.
அளவற்ற அன்பிற்கும், மனம் கவரும் மரியாதையான பேச்சிற்கும் பெயர்போன கோயம்புத்தூர் மாவட்டம் திமுகவின் ஊழல் ஆட்சியில் உருக்குலைந்து கிடக்கிறது என்பதற்கு, கோவை விமான நிலையம் அருகே இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரமே உதாரணம். தலைநகர் சென்னைக்கு அடுத்தபடியாக அதிவேகமாக வளர்ந்து கொண்டிருந்த கோயம்புத்தூரைப் பாலியல் குற்றங்களாலும் போதைப் பொருட்களாலும் முடக்கி வைத்திருக்கும் திமுகவை அம்மாவட்ட மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
தமிழ்நாட்டில் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் என்ன நினைத்து இந்த கூட்டணியை உருவாக்கினார்களோ, அதனை வெற்றி பெற வைப்பதற்கு நானும் அண்ணாமலையும் சேர்ந்து ஆடும் ஆட்டம் இனிமேல்தான் இருக்கப்போகிறது.
உ.பி.யில் தமிழ் கற்றுக் கொடுக்க பிரதமரே உத்தரவிட்டுள்ளார். இங்கு தமிழ் தமிழ் என கூறி தமிழை விற்கிறார்கள். மக்களுக்கு விடிவு இல்லை. திமுகவின் குடும்பத்தினருக்கு மட்டுமே விடிவு. நாங்கள் ஆடும் ஆட்டத்தை இனிமேல்தான் பார்க்கப் போகிறீர்கள்.
பெயரில் தான் 'விடியல்'.. ஆனால், மக்களின் வாழ்க்கையிலோ இன்னும் இருட்டு தான்! திமுக அரசின் ஆட்சியில் மக்களுக்கு விடிவே இல்லை!.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் வலைதளத்தில், “மேற்கு தொடர்ச்சி மலையின் நிழலில்,விவசாய உழைப்பின் வாசனையோடும், தொழில் வளர்ச்சியின் சாத்தியங்களோடும் கோவை மாவட்டத்தின் முக்கிய அடையாளமாக திகழும் அழகிய கிணத்துக்கடவில்தான் இன்று நம் “தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்” யாத்திரை மக்களின் பேராதரவோடும் உற்சாகத்தோடும் நடைபெற்றது.
விவசாயம், கைத்தறி மற்றும் சிறு தொழில்கள், கோழிப்பண்ணை, பால் உற்பத்தி, கோவை–பொள்ளாச்சி நெடுஞ்சாலையைக் கொண்ட வணிகச் சந்தை வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் முக்கிய பங்களிப்பு வழங்கும் பகுதியாக கிணத்துக்கடவு இன்று வளர்ந்து நிற்கிறது.
ஆனால், இத்தனை உழைப்பும் பங்களிப்பும் அளிக்கும் இந்த வளமான பகுதியை, விடியா திமுக அரசு அடிப்படை பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணாமல், வெற்று விளம்பரங்களிலும் அரசியல் நாடகங்களிலும் மட்டுமே மூழ்கி கிடக்கிறது.
கிணத்துக்கடவில் குடிநீர் பிரச்சனை ஆண்டாண்டுகளாக தீர்வு காணப்படாத முக்கிய பிரச்சனையாகவே தொடர்கிறது.அமராவதி, ஆழியாறு, பரம்பிக்குளம் திட்டங்களின் நீர்ப்பங்கீடு முறையாக செயல்படுத்தப்படாததால், விவசாயமும் குடிநீர் தேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வளமான பகுதியை வளர்க்க வேண்டிய அரசு, கிணத்துக்கடவை அலட்சியத்தின் விளிம்பில் நிறுத்தி வைத்துள்ளது. இதற்கெல்லாம் 2026 சட்டமன்றத் தேர்தலில் கிணத்துக்கடவு மக்கள் தக்க பதிலடியை வழங்குவார்கள் என்பது உறுதி” என்று அதில் பதிவிட்டுள்ளார்.






