தர்மபுரி - ஈரோடு மாவட்ட தவெக நிர்வாகிகள் இடையே வாக்குவாதம்

கோபி பச்சைமலை முருகன் கோவிலில் என்.ஆனந்த் சாமி தரிசனம் செய்தார்.
ஈரோடு,
தமிழக வெற்றிக் கழக பிரச்சார கூட்டம் நாளை (வியாழக்கிழமை) பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் அருகே உள்ள சரளையில் நடைபெறுகிறது. இதில் கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொள்கிறார். இதற்காக கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் ஈரோடு வந்து கூட்ட ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்.
இதனிடையே என். ஆனந்த் கோபி பச்சைமலை முருகன் கோவிலுக்கு நேற்று சென்றார். பின்னர் அவர் அங்கு பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். கோவிலுக்கு வந்த அவருக்கு பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர்கள் பாலாஜி, பிரதீப்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஈரோட்டிற்கு வந்த தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு யார் முதலில் மாலை போடுவது என்பதில் தர்மபுரி - ஈரோடு மாவட்ட தவெக நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாலை போட வந்த நிர்வாகியை மற்றொரு நிர்வாகி தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த என்.ஆனந்த் உடனே இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் செய்தார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






