டிசம்பர் 10-ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்


டிசம்பர் 10-ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்
x

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 10-ம் தேதி நடைபெற உள்ளது.

சென்னை,

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு 2 முறை செயற்குழு கூட்டத்தையும், ஒரு முறை பொதுக்குழு கூட்டத்தையும் நடத்த வேண்டும் என்பது விதி ஆகும்.

அந்த வகையில் அடுத்த மதம் (டிசம்பர்) 10-ம் தேதி அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்துக்கு அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமை தாங்குகிறார்.

சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள நிலையில், தேர்தல் வியூகம், வெற்றி வாய்ப்பு, கள நிலவரம், கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம், கூட்டணி பேச்சுவார்த்தை, கூட்டணிக்கு கட்சிகளை இழுப்பதற்கான வியூகங்கள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் திமுக அரசுக்கு எதிரான கண்டன தீர்மானங்கள் பல இருக்கும் என்றும் அக்கட்சி வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பை வலியுறுத்திய செங்கோட்டையன் நீக்கம் மற்றும் அதிமுக-பாஜக கூட்டணி அமைத்த பின் நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் என்னென்ன முடிவுகள் எடுக்கப்படும்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அதிமுகவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கழக சட்ட திட்ட விதிகள் 19(vil மற்றும் 25(ii)-ன்படி, வருகின்ற 10.12.2025 (புதன்கிழமை) காலை 10 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி மண்டபத்தில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.

கழக செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story