கண்ணீர்விட்டு அழும் நிலையில் அதிமுக: டிச.15-ல் முக்கிய முடிவு - ஓ.பன்னீர் செல்வம்

டிசம்பர் 15-ம் தேதிக்குள் திருந்தவில்லை என்றால், திருத்தப்படுவீர்கள் என ஓ.பன்னீர் செல்வம் ஆவேசமாக கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை வேப்பேரியில் நடந்த தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:-
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு, அதிமுக தொண்டர்கள் உரிமை கழகமாக மாறியுள்ளது. வருகிற டிசம்பர் 15-ம் தேதி மா.செ.க்கள் கூட்டத்தை நடத்தி முக்கிய முடிவு எடுக்க உள்ளேன். டிசம்பர் 15-ம் தேதிக்குள் திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள்.
சில சர்வாதிகாரிகளால் நம்முடைய இயக்கம் கடந்த 11 தேர்தல்களில் தோல்வியை சந்தித்து வருகிறது. தொடர் தோல்விகளால் நாம் கண்ணீர் விட்டு அழும் நிலையில் அதிமுக உள்ளது. தவறான நடைமுறை, தவறான பொதுக்குழு, தவறான பாதையில் தோல்வியை சந்தித்து வருகிறது கழகம். கழகம் ஒருங்கிணைய வேண்டும், இல்லாவிடில் எங்களின் முடிவை மக்கள் ஏற்கும் நிலைக்கு எங்களை தள்ளிவிடாதீர்கள். 3 ஆண்டுகளாக கொடுத்த ஆதரவு, தியாக உணர்வு செயல்பாடுகளுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பேசிய வைத்திலிங்கம்,
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவானது, இனிமேல் அ.தொ.உ.மீ. கழகமாக செயல்படும் எனவும், டிச.15 நடைபெறும் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் ஒரு மாதத்தில் இணைப்பு நடக்காவிட்டால் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் புதிய கட்சி உருவாக்கப்படும் என்றார்.






