நெல்லை-செங்கோட்டை பாசஞ்சர் ரெயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு

வருகிற 3-ந்தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைப்பதாக தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.
நெல்லை,
நெல்லை-செங்கோட்டை இடையே தினசரி பாசஞ்சர் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயிலின் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக, காலை மற்றும் மாலை வேளைகளில் இயக்கப்படும் இந்த ரெயிலில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலை நிமித்தமாக செல்பவர்கள் அதிகம் பேர் பயணம் செய்வதனால், அந்த சமயங்களில் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்படும்.
பாசஞ்சர் ரெயில்கள் 12 பெட்டிகளுடன் மட்டுமே இயங்குவதால் பயணிகள் ரெயிலில் இடம் கிடைக்காமல் காலை, மாலை நேரங்களில் நின்று கொண்டும், வாசலில் தொங்கி கொண்டும் பயணம் செய்கிறார்கள். எனவே பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று பயணிகள் மற்றும் பயணிகள் நலச்சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
சமீபத்தில் ராபர்ட் புரூஸ் எம்பி. நெல்லையில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்ட செங்கோட்டை ரெயிலில் பயணம் செய்து பயணிகளின் சிரமங்களை பார்வையிட்டு, குறைகளை கேட்டார். மேலும் மதுரை ரெயில்வே கோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பொது மேலாளரை சந்தித்து நெல்லை -செங்கோட்டை பாசஞ்சர் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்குமாறு வலியுறுத்தினார்.
இந்த நிலையில் வருகிற மே மாதம் 3-ந்தேதி முதல் நெல்லை -செங்கோட்டை பாசஞ்சர் ரெயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பதாக தென்னக ரெயில்வே அறிவித்து உள்ளது. அதன்படி நெல்லை சந்திப்பில் இருந்து காலை 6.50 மணி மற்றும் மதியம் 1.40 மணிக்கு புறப்படும் செங்கோட்டை பாசஞ்சர் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகிறது.
மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து காலை 10.05 மணி மற்றும் மாலை 6.05 மணிக்கு புறப்படும் நெல்லை பாசஞ்சர் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகிறது. இதில் 14 பொது பெட்டிகள், கார்டுடன் இணைந்த 2 பெட்டிகள் என மொத்தம் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
அதே நேரத்தில் நெல்லை -செங்கோட்டை இடையே இயக்கப்படும் மற்ற பாசஞ்சர் ரெயில்களிலும் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.