சென்னையில் தெருநாய்களை பாதுகாக்க கோரி பேரணி: நடிகை நிவேதா பெத்துராஜ் பங்கேற்பு

தெருநாய்களை பாதுகாக்க கோரி விலங்குகள் நல ஆர்வலர்கள் சார்பில் சென்னை எழும்பூரில் அமைதி பேரணி நடந்தது.
தெருநாய்களை பாதுகாக்க கோரி விலங்குகளுக்கான சொர்க்கம் என்ற அரசுசாரா அமைப்பு சார்பில், புதுப்பேட்டையில் உள்ள லாங்ஸ் கார்டன் சாலையில் இருந்து ரமடா ஓட்டல் வரையில் நேற்று அமைதி பேரணி நடந்தது. இந்த பேரணியில் நடிகை நிவேதா பெத்துராஜ், நடன இயக்குனர் ராபர்ட் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் உட்பட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும் ஏராளமான சிறுவர்-சிறுமியர், கைக்குழந்தையுடன் தாய்மார்களும் கலந்து கொண்டனர்.
இதில் பலர் தங்கள் வளர்ப்பு நாய்களை அழைத்து வந்திருந்தனர். அதுமட்டுமில்லாமல் இந்த பேரணியில் 2 பசு மாடுகளும் அழைத்துவரப்பட்டிருந்தது. தொடர்ந்து தெரு நாய்களுக்கு ஆதரவான பதாகைகளை ஏந்தியும், தெருநாய்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியும் பேரணியாக நடந்து சென்றனர்.
பின்னர் மீண்டும் அதே இடத்தில் வைத்து நடிகை நிவேதா பெத்துராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த உலகத்தை அனைவரும் சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும். நாய்கள் மனிதர்களை கடிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ரேபிஸ் நோய் தொற்று மிகவும் மோசமானது. ஆனால் அதில் மக்களை அச்சம் ஏற்பட வைப்பதை விட அதற்கு ஒரு தீர்வு கண்டறிவது மேலானது.
சிறுவயது முதல் நாய் கடிகளிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது என குழந்தைகளுக்கு கற்று கொடுக்கப்பட வேண்டும். ஒருவர் நம்மிடம் தவறாக நடந்து கொண்டால் அவரை கொலை செய்ய வேண்டும் என யாரும் கூறுவதில்லை. அதேபோல விலங்களிடமும் இருக்க வேண்டும். தெரு நாய்கள் அகற்றுவதே ஒரே தீர்வு கிடையாது. நாய்கள் குறைந்து விட்டால் குரங்குகள் அதிகரிக்க தொடங்கிவிடும்.
மனிதர்களே ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும்போது விலங்குகள் மீது எப்படி நமக்கு பாசம் வரும். பராமரிப்பு மையங்களில் அடைக்கப்படும் நாய்கள் அவற்றுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டு உயிரிழக்க நேரிடும். இதற்கு ஒரு தீர்வாக இருப்பது, பிடித்து வரப்பட்ட நாய்களை தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே இடத்தில் விட வேண்டும். அரசு பராமரிப்பு மையம் அமைத்து தெருநாய்களை பாதுகாப்பதை விட, அனைத்து நாய்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது சிறந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.






