விபத்துகள் இல்லா சாலை போக்குவரத்தை தமிழ்நாட்டில் உறுதி செய்ய வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்


விபத்துகள் இல்லா சாலை போக்குவரத்தை தமிழ்நாட்டில் உறுதி செய்ய வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
x

தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“அண்மைக் காலமாக தமிழ் நாட்டில் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. பரிதாபகரமாக மக்களின் உயிர்கள் இந்த விபத்துகளில் பலியாகின்றன. பலர் கடுமையாக ஊனமடைகின்றனர். உடல் உறுப்புகளை இழக்கின்றனர். இதனால் வாழ்நாள் முழுவதும் சொல்லொண்ணா பாதிப்புகளுக்கும், மன உளைச்சல்களுக்கும் ஆளாகின்றனர்.

நேற்று (30-11-2025) சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே, அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், ஏழை குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் தென்காசியில் நடந்த சாலை விபத்தில் லாரி மோதி சுரண்டை நகராட்சி பெண் நகர்மன்ற உறுப்பினர் உட்பட அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மூன்று பேர் பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர். இது தமிழக மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துகளுக்கு உள்ளாவதும் அதிகரித்து வருகிறது. இதில் ஏராளமான இளம் உயிர்கள் பலியாகின்றன. இப்படி சாலை விபத்துகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இவற்றால், பல விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகின்றன.

எனவே, தமிழ்நாடு அரசு இந்த சாலை விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்விபத்துக்களுக்கான காரணங்கள் கண்டறிய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும். அதன் பரிந்துரைகள் அடிப்படையில், விபத்துகளுக்கான காரணங்களை போக்கி, விபத்துகள் இல்லா சாலை போக்குவரத்தை தமிழ்நாட்டில் உறுதி செய்ய வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.

அதே போன்று இளைஞர்களும், பொதுமக்களும் சாலை விதிகளை முறையாகப் பின்பற்றி, விபத்துகளை தடுப்பதற்கு உதவிட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story