பராமரிப்பு பணி காரணமாக ஏ.சி.மின்சார ரெயில் சேவை இன்று ரத்து

ஏ.சி.மின்சார ரெயில் நாள் தோறும் 3 சேவைகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை,
தமிழகத்தின் முதல் ஏ.சி.மின்சார ரெயில் சேவை கடந்த 19-ந்தேதி சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. சுட்டெரிக்கும் வெயிலுக்கு குளு குளு பயணத்தை விரும்பும் பயணிகள் இந்த ரெயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த ரெயில் சென்னை கடற்கரையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு 8.35 மணிக்கு செங்கல்பட்டு ரெயில் நிலையம் செல்கிறது. மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு 10.40 மணியளவில் கடற்கரை ரெயில் நிலையம் வந்தடைகிறது.
பின்னர், கடற்கரையில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு 5.25 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும். மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு கடற்கரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. பின்னர், இரவு கடற்கரையில் இருந்து 7.35 மணிக்கு புறப்பட்டு 8.30 மணிக்கு தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. நாள் தோறும் 3 சேவைகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (26-ந்தேதி) மதியம் இயக்கப்படும் ஏ.சி.மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மதியம் 3.45 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் ஏ.சி. மின்சார ரெயில், மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து மாலை 5.45 மணிக்கு கடற்கரை செல்லும் ஏ.சி.மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.