புதுக்கோட்டை புதிய டவுன் பஸ்கள் நிறுத்துமிடத்தில் நிழற்பந்தல் அமைப்பு


புதுக்கோட்டை புதிய டவுன் பஸ்கள் நிறுத்துமிடத்தில் நிழற்பந்தல் அமைப்பு
x
தினத்தந்தி 26 April 2025 11:44 AM IST (Updated: 26 April 2025 1:05 PM IST)
t-max-icont-min-icon

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் டவுன் பஸ்கள் நிறுத்துமிடத்தில் நிழற்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் அதனை இடித்து விட்டு புதிதாக கட்டப்பட உள்ளது. சேதமடைந்த கட்டிடங்கள் முழுவதுமாக இடிக்கப்பட்ட நிலையில் அந்த இடம் மைதானம் போல காட்சியளிக்கிறது. பஸ் நிலையம் அருகில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை வளாகத்தில் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து புறநகர் பஸ்கள் இயக்கப்படுகிறது. டவுன் பஸ்கள் வழக்கம் போல பஸ் நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் கட்டிடங்கள் முழுமையாக இடித்து அகற்றப்பட்டு விட்டதால் டவுன் பஸ்கள் நிறுத்துமிடத்தில் நிழற்குடை வசதி இல்லாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் வெயில், மழையில் அவதி அடைந்து வந்தனர். இது தொடர்பாக தினத்தந்தியில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மாநகராட்சி நிர்வாகத்தினர் நேற்று நடவடிக்கை எடுத்தனர்.

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் டவுன் பஸ்கள் நிறுத்துமிடத்தில் பசுமை பந்தல் என அழைக்கப்படும் நிழற்பந்தல் நேற்று அமைக்கப்பட்டது. நீண்ட வலையான இதனை பஸ்கள் நிறுத்துமிடம் எதிரே, அதாவது இரு சக்கர வாகன நிறுத்துமிட பக்கவாட்டு சுவர் அருகே கம்புகள் கட்டி அதன் மேல் நீண்ட வலையை மேற்கூரையை போல தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. நிழற்குடை கோரிக்கையை செய்தியை வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும், நிழற்பந்தல் அமைத்து கொடுத்த மாநகராட்சி நிர்வாகத்தினருக்கும் பொதுமக்கள் நன்றியும், பாராட்டுகளும் தெரிவித்தனர்.

அதேநேரத்தில் வலைபோல உள்ள இந்த பந்தலில் நேற்று மழை பெய்த போது அதில் இருந்து தண்ணீர் வடிந்தது. இதனால் பொதுமக்கள் நிழற்பந்தலை பயன்படுத்த முடியவில்லை. மேலும் வெயில் அடிக்கும் போது வெயிலின் தாக்கம் சற்று அதில் இருந்தது. இதனால் அந்த வலைக்கு பதிலாக மேற்கூரை போன்று ஷெட்கள் அமைக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story