கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை... அதிர்ச்சி சம்பவம்

கோப்புப்படம்
சென்னையில் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் விஜயகுமார் (48 வயது). இவர் அரசு நகர்ப்புற மேம்பாட்டு துறையில் டிரைவராக வேலை செய்கிறார். கடந்த 16-ந்தேதியன்று மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். சாமி கும்பிட்டுவிட்டு கோவில் பிரகாரத்தை சுற்றிவந்தார். அவருக்கு முன்னால் இளம்பெண் ஒருவர் தனியாக சென்று கொண்டிருந்தார்.
அந்த இளம் பெண்ணின் பின்பக்கமாக சென்று விஜயகுமார் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. அந்த இளம்பெண் விஜயகுமாரை கண்டித்துள்ளார். ஆனால் அதை பொருட்படுத்தாமல் விஜயகுமார், அந்த இளம்பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் அந்த பெண்ணை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட இளம்பெண் சென்னையில் உள்ள ஆயூர்வேத மருத்துவ கல்லூரியில் 5-ம் ஆண்டு படிக்கும் மாணவி ஆவார். அவர் விஜயகுமார் மீது சென்னை மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
கபாலீசுவரர் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, விஜயகுமார் மருத்துவ மாணவியிடம் அத்துமீறியது உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து விஜயகுமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






