41 பேர் பலியான வழக்கு: புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவிடம் 10 மணி நேரம் சி.பி.ஐ. விசாரணை

புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்பட 5 பேரிடம் 10 மணி நேரம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
கரூர்,
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந்தேதி நடைபெற்றத.வெ.க. பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பான வழக்கை ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர், தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபற்றி கரூர் கோர்ட்டில் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில், கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன், மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணைச்செயலாளர் நிர்மல்குமார் மற்றும் த.வெ.க.வை சேர்ந்த சிலர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், கட்சி நிர்வாகி பவுன்ராஜ் உள்ளிட்டோருக்கு சி.பி.ஐ. சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை 9.45 மணியளவில் தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், மதியழகன், பவுன்ராஜ் ஆகிய 5 பேரும் காரில் வந்தனர். பின்னர் அவர்கள் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகினர்.
அப்போது அவர்களிடம், பிரசார கூட்டம் எத்தனை மணிக்கு தொடங்கும் என அறிவித்து இருந்தீர்கள், எத்தனை மணிக்கு விஜய் பிரசாரத்தை தொடங்கினார், கூட்டத்தில் எவ்வளவு பேர் கலந்து கொண்டனர், எவ்வளவு பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்து இருந்தீர்கள் என்பன உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை மேற்கொண்டதாக தெரியவருகிறது. அப்போது, அவர்கள் தெரிவித்த தகவல்களை சி.பி.ஐ. அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர். இந்த விசாரணையானது இரவு 8.20 மணி வரை சுமார் பத்தரை மணி நேரம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.






