தண்ணீர் தொட்டியில் வீசி 3 மாத பெண் குழந்தை கொலை... கொடூர தாய் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்

இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
ஆம்பூர்,
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி டவுன் ரெட்டி தோப்பு பகுதியை சேர்ந்தவர் அக்பர் பாஷா (வயது 26). இவர் துத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அஸ்லியா தஸ்மின் (23). இவர்களது மகள்கள் அபிமா பாத்திமா (வயது 5), ஹர்பா பாத்திமா (3 மாதம்). மகன் முகமது அதினான் (2). இவர்கள் அதே பகுதியை சேர்ந்த ஆஷியா என்பவரது வீட்டின் மேல் மாடியில் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர்.
நேற்று காலை அக்பர் பாஷா வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். அதன்பின் மனைவி அஸ்லியா தஸ்மின், குழந்தைகளுடன் வீட்டில் இருந்துள்ளார். மதியம் 12 மணியளவில் வீட்டில் இருந்த 3 மாத பெண் குழந்தை ஹர்பா பாத்திமாவை காணவில்லையென கூறி தாயார் அஸ்லியா தஸ்மின் கீழ் வீட்டிற்கு வந்து உரிமையாளர் ஆஷியாவிடம் கேட்டுள்ளார். பின்னர் இருவரும் குழந்தையை தேடி உள்ளனர்.
அப்போது அவர்கள் கீழ் வீட்டின் படிக்கட்டுக்கு கீழ் தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்துள்ளனர். அதில் 3 மாத குழந்தையான ஹர்பா பாத்திமா தண்ணீரில் மிதந்தாள். உடனடியாக அவர்கள் குழந்தையை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் விரைந்து வந்து குழந்தையின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது போலீசாரின் கேள்விகளுக்கு அஸ்லியா தஸ்மின் பதில் சொல்லமுடியாமல் திணறினார். இதனால் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அவர் குழந்தையை கொன்றதை ஒப்புக்கொண்டார்.
அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், 3 குழந்தைகளை வளர்க்க முடியாததாலும் தூங்குவதற்கு கூட நேரம் இல்லாததாலும் மன உளைச்சல் காரணமாக 3-வது குழந்தை ஹர்பா பாத்திமாவை கொலை செய்ய முடிவு செய்து தண்ணீர் தொட்டியில் வீசியதாகவும் அதில் குழந்தை மூச்சுத்திணறி இறந்து விட்டதாகவும் தெரிவித்தார். இதையடுத்து அஸ்லியா தஸ்மினை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.






