வாக்காளர்களை கவர இந்த மாதம் அறிவிக்கப்படும் 3 மெகா திட்டங்கள் - தி.மு.க. அரசு தீவிரம்

இதுவரை ஒரு கோடியே 14 லட்சம் பெண்களுக்கு மாதம்தோறும் தலா ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை,
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே, வாக்காளர்களை கவர இந்த மாதமே 3 மெகா திட்டங்களை அறிவிக்க தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே, தமிழ்ப் புதல்வன், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம், விடியல் பயணம் திட்டம், புதுமைப்பெண் திட்டம் போன்றவை கடந்த 4½ ஆண்டுகளில் தொடங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன.
சட்டசபை தேர்தலுக்கான தேதி பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு பிறகு புதிய திட்டங்களை அறிவிக்க முடியாது. எனவே, அதற்கு முன்னதாக 3 மெகா திட்டங்களை அறிவிக்க தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட உள்ளது. இதற்கான டெண்டர், ஏசர், டெல், எச்.பி. ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது இந்த 3 நிறுவனங்களும் 20 லட்சம் லேட்டாப்களை தயாரித்துவிட்டது.
இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த மாதம் தொடங்கி வைக்க இருக்கிறார். முதற்கட்டமாக ஏப்ரல் மாதத்திற்குள் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல், கடந்த தேர்தலில் அறிவிக்கப்பட்ட மகளிருக்கு ரூ.1000 உரிமை தொகை திட்டமும் செயல்பாட்டுக்கு வந்து பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை ஒரு கோடியே 14 லட்சம் பெண்களுக்கு மாதம்தோறும் தலா ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
என்றாலும், நிறைய பெண்கள் இந்த திட்டத்தில் சேர முடியவில்லை என்ற புகார்கள் இருந்தது. தற்போது, புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. இந்த திட்டத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்க இருக்கிறார்.
மேலும், புத்தாண்டின் தொடக்கத்தில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் தொகுப்புடன் ரொக்கத் தொகையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தேர்தல் வருவதால் இந்த ஆண்டு அதற்கு வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 27 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில், எவ்வளவு தொகை வழங்குவது என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து அறிவிப்பார் என கூறப்படுகிறது.






