2-ம் ஆண்டு நினைவு தினம்: விஜயகாந்த் நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி
விஜயகாந்த் நினைவு தினத்தை குருபூஜையாக தேமுதிக கடைபிடித்து வருகிறது.
சென்னை,
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
விஜயகாந்த் நினைவு தினத்தை குருபூஜையாக தேமுதிக கடைபிடித்து வருகிறது. இதில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் காலை முதலே தேமுதிக தொண்டர்களும், ரசிகர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதைபோல பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி விஜயகாந்த் நினைவிடத்தில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கருநாகராஜன், நடிகை கஸ்தூரி உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதைபோல திரைபிரபலங்களும், திரைப்பட இயக்குநர்களும் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். விஜயகாந்த் நினைவிடத்தில், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் அஞ்சலி செலுத்தினார்.
விஜயகாந்த் நினைவிடத்தில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் திமுக சார்பில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது அவருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் உடனிருந்தனர்.
விஜயகாந்த் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். குருபூஜையில் கலந்துகொள்ள தேமுதிக சார்பில் அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.








