பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் இளம்பெண் தவறவிட்ட 17½ பவுன் நகைகள் மீட்பு

இளம்பெண்ணின் குடும்பத்தினரை தென்காசிக்கு அழைத்து வரப்பட்டு, நகைகளுடன் பெட்டியை போலீசார் ஒப்படைத்தனர்.
தென்காசி,
சென்னை அருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகள் வளர்மதி (வயது 23). இவர் தனது குடும்பத்தினர் சிலருடன் சென்னையில் இருந்து விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள உறவினர் வீட்டுக்கு செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டார். அவர்கள் திருத்தங்கல் ரெயில் நிலையத்தில் இறங்கினார்கள். அப்போது, வளர்மதி தான் வைத்திருந்த பெரிய பெட்டியை ரெயிலில் தவறவிட்டது தெரியவந்தது.
சிறிது நேரத்தில் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த வளர்மதி அங்குள்ள ரெயில்வே போலீசில் தகவல் தெரிவித்தார். மேலும் அந்த பெட்டியில் தங்க சங்கிலி, நெக்லஸ், வளையல், டாலர் என சுமார் 17½ பவுன் நகை இருந்ததாக கூறினார். இதுகுறித்து உடனடியாக தென்காசி ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ரெயில் தென்காசிக்கு வந்த போது, வளர்மதி பயணித்த பெட்டியில் ஏறி போலீசார் சோதனை செய்தனர்.
அதில் அவர் தவறிவிட்ட பெட்டி அப்படியே இருந்தது. அதை திறந்து சோதனை செய்த போது சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான நகைகள் இருந்தது. அவற்றை போலீசார் மீட்டனர். பின்னர் வளர்மதி மற்றும் குடும்பத்தினர் தென்காசிக்கு அழைத்து வரப்பட்டு, நகைகளுடன் பெட்டியை போலீசார் ஒப்படைத்தனர். ரெயில்வே போலீசாருக்கு வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.






