15 நாட்களில் 16,248 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 6,78,034 பேர் பயன்பெற்றுள்ளனர் - மா.சுப்பிரமணியன்


15 நாட்களில் 16,248 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 6,78,034 பேர் பயன்பெற்றுள்ளனர் - மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 31 Oct 2025 9:19 PM IST (Updated: 31 Oct 2025 9:32 PM IST)
t-max-icont-min-icon

டெங்கு பாதிப்புகள் குறித்து கண்டறிய 4,755 ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் 2,52,738 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் இன்று (31.10.2025) சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் அலுவலக கூட்டரங்களில், வடகிழக்கு பருவமழை சுகாதார நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை கூட்டம்

வடகிழக்கு பருவமழை சுகாதார நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள இணை இயக்குநர்கள், கல்லூரி முதல்வர்கள், மாவட்ட சுகாதார அலுவலர்கள் என்று உயரலுவலர்கள் காணொளி வாயிலாக கலந்து கொண்டனர். ஒவ்வொரு வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த 07.10.2025 அன்று சென்னை ஓமந்தூரார் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் மக்கள் நல்வாழ்வுத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஊரகவளர்ச்சித்துறை, பள்ளிக்கல்வித்துறை போன்ற பல்வேறு சேவை துறைகளில் 700க்கும் மேற்பட்ட உயரலுவலர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடத்தப்பட்டது.

அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறிப்புகளாக உயரலுவலர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் நிறைவேற்றிட ஏதுவாக கொடுக்கப்பட்டது. அந்தவகையில் தமிழ்நாடு முழுவதும் இதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வடகிழக்கு பருவமழை கடந்த 16.10.2025 அன்று தொடங்கியது. வடகிழக்கு பருவமழையினை பொறுத்தவரை நமக்கு வருகின்ற மழையின் சராசரி அளவு 86.7 செ.மீ ஆகும். இதுவரை 24.9 செ.மீ அளவிற்கு மழை பெய்திருக்கிறது. இன்னமும் 62 செ.மீ அளவிற்கு மழை பெய்ய வேண்டும். இந்நிலையில்தான் மக்கள் நல்வாழ்வுத்துறை பருவமழையின் போது ஏற்படுகின்ற நோய் பாதிப்புகள் குறித்து விளக்கமாக கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து 16,248 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 6,78,034 பேர் பயனடைந்துள்ளனர். இந்த 15 நாட்களில் காய்ச்சல் பாதிப்புகள் என்று கண்டறியப்பட்டவர்கள் 5,829 பேர், இருமல் சளி பாதிப்புகள்

கண்டறியப்பட்டவர்கள் 51,107 பேர், வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்டவர்கள் 863 பேர், இவர்கள் அனைவருக்குமே இம்முகாம்களின் வாயிலாக மருந்து மாத்திரைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டு நலமுடன் இருக்கிறார்கள்.

அந்தவகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலோடு, பருவமழையின்போது ஏதாவது ஒரு தெருவில் அல்லது ஒரு ஊரில் 2க்கும் மேற்பட்ட காய்ச்சல் பாதிப்புகள் இருக்குமேயானால் உடனடியாக அங்கு மருத்துவ முகாம்கள் நடத்திட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதன் மூலம் 16,248 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ முகாம்கள் 10,000 தொடங்கி 26,000 மருத்துவ முகாம்கள் வரை இரண்டு ஆண்டுகளில் மிக்ஜாம் புயல் பாதிப்பு, பெஞ்சன் புயல் பாதிப்புகள் என்று இருந்தபோது கூடுதலாக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் பாதிப்புகள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக 40,000 களப்பணியாளர்கள் நாள்தோறும் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதேபோல் ஊராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளில் கொசு ஒழிப்பு பணிகளில் 25,000க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் ஈடுப்படுத்தப்பட்டு அவர்களும் மிகச் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்தநிலையில் டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, காலரா, டைபாய்டு, எலிக்காய்ச்சல், உன்னிக்காய்ச்சல், புளுக்காய்ச்சல் போன்ற மழைக்காலங்களில் ஏற்படுகின்ற நோய் பாதிப்புகள் குறித்து மிகத் தீவிரமாக தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகிறது.

டெங்கு பாதிப்புகள்

டெங்கு பாதிப்புகள் பொறுத்தவரை தமிழ்நாட்டில் கடந்த 4.5 ஆண்டுகளில் மிக கட்டுக்குள் இருக்கின்றது. இந்த அரசு பொறுப்பேற்பதற்கு முன்பு டெங்கு பாதிப்புகள் அரசு மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் சேர்க்கப்பட்டவர்கள் பட்டியல் மட்டுமே செய்திகளாக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது தனியார் மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்கள் பட்டியலும் தற்போது மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.

அந்தவகையில் தமிழ்நாட்டில் இதுவரை டெங்கு காய்ச்சல் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,725 பேர், உயிரிழப்புகள் 9 பேர், நான் தொடர்ச்சியாக சொல்லி வருகிறேன். உயிரிழப்புகள் இல்லாத வகையில் இத்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது, என்றாலும் காய்ச்சல் பாதிப்புகள் என்று சொன்னவுடன் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. அதேபோல் இணை நோய் பாதிப்புகள் உள்ளவர்கள் மிக எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குழந்தைகள், வயது மூத்தவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் மருத்துவர்கள் ஆலோசனைகள் இல்லாமல் மருந்து மாத்திரைகள் உட்கொள்ளாமல் இருப்பது நல்லது.

இப்படி காய்ச்சல் பாதிப்புகள் வந்தவுடன் மருத்துவரை அணுகாமல் இருந்தால் உயிரிழப்புகள் ஏற்படும். எனவே பாதிப்பு ஏற்பட்டவுடன் மருத்துவரை சந்திப்பது நல்லது. இந்த 9 உயிரிழப்புகளும் எதனால் ஏற்பட்டது என்பதற்கு தனித்தனி காரணங்கள் இருக்கின்றது. டெங்கு பாதிப்புகளால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டது இரண்டு ஆண்டுகள் தான். ஒன்று 2012இல் 66 பேர் டெங்கு பாதிப்புகளினால் உயிரிழந்தனர். இன்னொன்று 2017இல் 65 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு அதனை கட்டுப்படுத்தி இறப்புகள் என்பது ஒற்றை இலக்கத்தில் இருந்து கொண்டு அதனையும் குறைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்தமாதிரியான நடவடிக்கைகளுக்காக தான் இக்கூட்டம் நடைபெற்று வருகிறது. டெங்கு பொறுத்தவரை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்தவதற்கு 4,755 ஆய்வகங்கள் இருக்கின்றது. இந்தியாவில் ஒரு மாநிலத்தில் டெங்கு பாதிப்புகள் குறித்து கண்டறிய ஆய்வகங்கள் இந்த அளவிற்கு இருப்பது தமிழ்நாட்டில்தான். இந்தாண்டு மட்டுமே பரிசோதனைகளுக்கு எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,52,738. இதன்மூலம் இந்தாண்டு டெங்கு கட்டுக்குள்

வைக்கப்பட்டுள்ளது. இத்துறையின் மூலம் டெங்கு சிகிச்சைகளுக்கு 24,240 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே இத்துறை மிகவும் கவனமாக நோய் பாதிப்புகளிலிருந்து மக்களை காப்பதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்பதை பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டு வருகிறது. தேவையற்ற முறையில் பதட்டங்களை ஏற்படுத்த வேண்டாம் என்பதை அன்புகூர்ந்து கேட்டுக் கொள்கிறோம். உண்மையான பாதிப்புகள் இருக்குமேயானால் அதற்குரிய தீர்வுகள் எடுப்பதற்கு இந்த அரசு தொடர்ந்து தயாராக இருக்கிறது. மழைக்கால நோய் பாதிப்புகள் என்பது கணிசமாக குறைந்து வருகிறது.

நோய் பாதிப்பு ஒப்பீடு

கடந்த ஆண்டு மலேரியா பாதிப்பு 284, இந்தாண்டு 218 ஆக குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டு சிக்கன் குனியா நோய் பாதிப்பு 550, இந்த ஆண்டு 429 ஆக குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டு வயிற்றுப்போக்கு பாதிப்பு 86,026 இந்த ஆண்டு 64,519 ஆக குறைந்திருக்கிறது. மஞ்சள் காமாலை கடந்த ஆண்டு பாதிப்பு 3,210 இந்த ஆண்டு 2,532. காலரா பாதிப்பு கடந்த ஆண்டு 53, இந்தாண்டு 52, டைபாய்டு பாதிப்பு கடந்த ஆண்டு 20,525 இந்த ஆண்டு 14,346 எலிக்காய்ச்சல் பாதிப்பு கடந்த ஆண்டு 3,104 இந்தாண்டு 2,134 ஆக குறைந்திருக்கிறது. இன்னமும் கூட இவற்றையெல்லாம் மிக குறைந்த எண்ணிக்கையில் பாதிப்புகளை உருவாக்குவதற்கு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவர்களும் பொது மக்களுக்கு குறிப்பாக எலிக்காய்ச்சல் ஏற்படுவதற்குரிய காரணங்களை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் வெறும் கால்களில் மழைநீரில் நடக்க வேண்டாம் என்றெல்லாம் அறிவுறுத்தி வருகிறது. பொது சுகாதாரத்துறையில் 8,713 துணை சுகாதார நிலையங்கள் இருக்கின்றது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் 2,336 இருக்கின்றது. அனைத்து மருத்துவமனைகளிலும் இதற்காக துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள் எல்லாம் அந்தந்த பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளின் சுவரில் ஒட்டப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தாலும் பொதுமக்கள் கூடுதல் விழிப்புணர்வோடு இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

பாம்புக்கடி நாய்க்கடி தொடர்பான கேள்விக்கு

இந்த அரசு பொறுப்பேற்பதற்கு முன்பு வரை பாம்புக்கடி, நாய்க்கடிகளுக்கான மருந்துகள் என்பது வட்டார அரசு மருத்துவமனைகள், தலைமை மருத்துவனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே இருந்தது. இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு குறிப்பாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பாம்புக்கடி, நாய்க்கடி போன்றவை கிராமப்புறங்களில் உள்ள மக்களை தான் அதிகம் பாதிக்கிறது என்று சொன்னதன் விளைவு பிரத்யேகமாக ஒரு திட்டம் தீட்டப்பட்டு பாம்புக்கடிக்கான (ASV) என்று சொல்லக்கூடிய மருந்தும், நாய்க்கடிக்கான (ARV) என்று சொல்லக்கூடிய மருந்தும் தமிழ்நாட்டில் இருக்கின்ற 2336 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது. நானும் ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் ஆய்வு செல்லும்போது பாம்புக்கடி, நாய்க்கடிக்கான மருந்துகள் இருப்பு குறித்து ஆய்வுகள் தொடர்ந்து செய்து வருகிறேன். தமிழ்நாட்டில் போதுமான அளவிற்கு மருந்து கையிருப்பில் இருக்கிறது.

பாம்புக்கடி இறப்பு தொடர்பான கேள்விக்கு

அந்த மருத்துவமனையில் இரண்டு மருத்துவர்கள். ஒரு மருத்துவர் கிராமத்தில் சென்று மருத்துவ சேவை ஆற்றுவதற்கு சென்றிருக்கிறார் என்று சொல்கிறார்கள். மருத்துவர் அந்த நேரத்தில் இல்லாத நிலையில் உடனடியாக தகவல் தெரிந்து சம்பந்தப்பட்ட மருத்துவரை தற்காலிக பணியிட நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அப்பகுதியில் இருப்பவர்கள்

என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால் அம்மருத்துவர் பணிக்கு வந்து விட்டார். அருகில் ஒரு கிராமத்திற்கு மருத்துவ சிகிச்சை அளிக்க சென்று இருக்கிறார் என்று சொல்கிறார்கள். அந்த நேரத்தில் செவிலியர் பணியில் இருந்திருக்கிறார்கள். அம்மருத்துவமனையில் (ASV) மருந்து இருந்திருக்கிறது. இம்மருந்து எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பொது சுகாதாரத்துறையினர் பலமுறை வகுப்புகள் நடத்தி இருக்கிறார்கள். இதற்கு முன்பு அம்மருத்துவமனையில் மருந்தே கிடையாது. ஆனால் தற்போது இம்மருத்து கையிருப்பில் இருக்கின்றது. இந்த மருந்து பயன்படுத்த தவறிய அந்த செவிலியர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இது மற்ற மருத்துவமனைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன் என்று மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ப.செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் வினீத், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் சோமசுந்தரம், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சுகந்தி ராஜகுமாரி, மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநர் சித்ரா, கூடுதல் இயக்குநர் சம்பத், இணை இயக்குநர் செந்தில் மற்றும் அனைத்து மாவட்ட இணை இயக்குநர்கள், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்கள், மாவட்ட சுகாதார அலுவலர்கள், உயரலுவலர்கள் ஆகியோர் காணொளி மூலமாக கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story