தூத்துக்குடியில் விற்பனைக்காக வைத்திருந்த 11 கிலோ கஞ்சா பறிமுதல்- 3 பேர் கைது

கோவில்பட்டி புதுகிராமம் சுடுகாட்டு பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி, கோவில்பட்டி உட்கோட்ட டி.எஸ்.பி. ஜெகநாதன் மேற்பார்வையில், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது தலைமையிலான போலீசார் நேற்று (25.04.2025) புதுகிராமம் சுடுகாட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இரண்டு இரு சக்கர வாகனங்களில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில் அவர்கள் நாலாட்டின்புதூர், கோபாலபுரம் நடுத்தெருவை சேர்ந்த முருகன் மகன் கருப்பசாமி (வயது 33), கோவில்பட்டி மந்திதோப்பு ரோடு பகுதியைச் சேர்ந்த குருசாமி மகன் ராஜசேகரபாண்டியன் (32) மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகியோர் என்பதும் அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து மேற்சொன்ன போலீசார் 2 பேரை கைது செய்ததோடு, இளஞ்சிறாரை கையகப்படுத்தி திருநெல்வேலி அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்த 11 கிலோ 150 கிராம் கஞ்சா, ரொக்கப் பணம் ரூ.1,400 மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.