குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை


குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை
x

குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தினால் பாரதிய நியாய சங்ஹிதா பிரிவு 105(2)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி

சாலை விபத்துகள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்துகளைத் தடுக்கும் நோக்கில், மாவட்ட காவல்துறையின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

சாலை விதிகளை மீறுபவர்கள் மீது எந்தவித பாரபட்சமுமின்றி, சட்டப்படி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விபத்துகள் நிகழும் பகுதிகளில் மோட்டார் வாகனத்துறை மற்றும் பிற சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து, காவல்துறையால் கூட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் குடிபோதையில் வாகனம் இயக்குவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குடிபோதையில் வாகனம் ஓட்டி ஒருவர் உயிரிழப்பை ஏற்படுத்தினால், பாரதிய நியாய சங்ஹிதா பிரிவு 105(2)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். இவ்வாறான குற்றத்திற்கு நீதிமன்றத்தால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

அதேபோல் குடிபோதையில் வாகனம் ஓட்டி ஒருவர் காயம் ஏற்படுத்தினால், பிரிவு 110ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். இந்த குற்றத்திற்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படும். ஏனெனில் குடிபோதையில் வாகனம் இயக்கும் நபர், தன்னுடைய நிலைமையை நன்கு அறிந்து, தன்னால் இயல்பாக வாகனத்தினை செலுத்த இயலாது என்பதனை தெரிந்து, வாகனத்தை இயக்கி பிறரது உயிருக்கும் உடலுக்கும் தீங்கினை ஏற்படுத்தும் பெரிய குற்றத்தினை செய்கிறார்.

அதேபோல் 18 வயது நிரம்பாத இளவர்களுக்கு வாகனங்களை கொடுத்து அதன் மூலம், ஓட்டுனர் உரிமம் இல்லாத மேற்சொன்ன நபர்களால் ஏற்படுத்தப்படும் விபத்துகளுக்கு, இளஞ்சிறார்களின் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்வதுடன், அவர்களை ஓட்ட அனுமதித்த அவர்களுடைய பெற்றோர்கள்/ பாதுகாவலர்கள்/ வாகன உரிமையாளர்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில் மட்டும், குடிபோதையில் வாகனம் ஓட்டி இறப்பு ஏற்படுத்திய 8 வழக்குகளும், வாகன உரிமம் பெறாத இளஞ்சிறார் ஒருவர் வாகனம் ஓட்டி இறப்பு ஏற்படுத்திய 1 வழக்கும் என மொத்தம் 9 வழக்குகள், கொலையாகாத மரணம் விளைவிக்கின்ற குற்ற வழக்குகளாக மாற்றப்பட்டுள்ளன.

அதேபோல் குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய 17 காய வழக்குகள் மற்றும் உரிமம் பெறாத இளஞ்சிறார் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய காய வழக்கு என மொத்தம் 18 வழக்குகள், கொலையாகாத மரணம் விளைவிக்கின்ற குற்ற முயற்சி வழக்குகளாக மாற்றப்பட்டுள்ளன.

மதுபோதையில் வாகனம் ஓட்டுவது, ஓட்டுநரின் உயிருக்கும், பிற நபர்களின் உயிருக்கும் கடுமையான இழப்பினை ஏற்படுத்தும் மிகப்பெரிய குற்றமாகும். இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொதுமக்கள் பிறரின் பாதுகாப்பிற்காக, மதுபோதையில் வாகனம் இயக்கும் செயல்களில் ஈடுபடாமல், சட்டப்படி பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story