சண்டே ஸ்பெஷல்: சாம்பார் செய்வது எப்படி?

பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ் பகுதியில் சாம்பார் எப்படி செய்வது? என்பது பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - 1 டம்ளர் அளவு
கத்தரிக்காய் - 2
தக்காளி - 2
உருளைக்கிழங்கு - 1
கேரட் - 1
(கேரட்டுக்கு பதில் முள்ளங்கியும் சேர்க்கலாம்)
மாங்காய் - சிறிய துண்டு
முருங்கைக்காய் -1
சின்ன வெங்காயம் - ஒரு கையளவு (தோல் நீக்கியது)
மல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு
'டூ இன் ஒன்' குழம்பு மசாலா - 3 ஸ்பூன்
பெருங்காயத் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை
2.5 லிட்டர் அளவுள்ள குக்கரில் துவரம் பருப்பை கழுவி எடுத்துக்கொள்ளவும். கத்தரிக்காய், தக்காளி, கேரட், உருளைக்கிழங்கு, மாங்காய், சின்ன வெங்காயம், முருங்கைக்காய் ஆகியவற்றை சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளவும். பருப்புடன் அதை சேர்க்கவும். நாம் தயாரித்து வைத்துள்ள 'டூ இன் ஒன்' குழம்பு மசாலாவை 3 ஸ்பூன் சேர்க்கவும். பெருங்காயத் தூளையும் சிறிது தூவவும்.
மல்லி இலையை ஒரு கைப்பிடி அளவு வேரை மட்டும் நீக்கிவிட்டு, காம்புடன் துண்டு துண்டாக வெட்டி சேர்க்கவும். காய்கறி முங்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு, தேவையான அளவு உப்பையும் சேர்த்து குக்கரை மூடி, அதன் தலைப்பகுதியில் விசிலை மாட்டி அடுப்பில் வைக்கவும். 5 முறை விசில் வந்ததும் குக்கரை இறக்கவும். காற்று போனவுடன் குக்கரை திறக்கவும்.
சாம்பார் கெட்டியாக இருந்தால் சற்று தண்ணீர் சேர்த்து மீண்டும் கொதிக்க வைத்து இறக்கவும். உப்பும் சரியாக இருக்கிறதா? என்பதை சோதித்துக்கொள்ளவும். தேவையென்றால் சேர்த்துக்கொள்ளவும்.
பிறகு, சிறிய வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, கடுகு, வெங்காயம், கருவேப்பிலை போட்டு தாளித்து சாம்பாரில் ஊற்றவும். தேங்காய் துருவல் வேண்டுமானால் கொஞ்சம் சேர்த்துக்கொள்ளவும். மணமணக்கும் சாம்பார் ரெடி.






