இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு ஸ்கூட்டரில் வேகமாக சென்றார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசிக்கும் ஒரு இளம்பெண், வெப் டிசைனராக பணியாற்றி வருகிறார். கடந்த 7-ந் தேதி ஜக்கூர் மெயின் ரோட்டில் இளம்பெண் காரில் நண்பர்களுடன் சென்றார். அப்போது சாலையோரம் வாகனம் மோதியதில் ஒரு நாய் படுகாயம் அடைந்து கிடந்தது. உடனே காரை நிறுத்திய இளம்பெண், நாயை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தார். அப்போது அங்கு ஸ்கூட்டரில் வந்த வாலிபர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் கூச்சலிட்டார்.உடனே அங்கிருந்து சென்ற வாலிபர் சில நிமிடத்தில் மீண்டும் வந்து, 2-வது முறையாக இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு ஸ்கூட்டரில் வேகமாக சென்றார். உடனே இளம்பெண், அவரது நண்பர்கள், அவரை விரட்டி சென்றனர். ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ஸ்கூட்டரில் இருந்து வாலிபர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ரோந்து போலீசார் விரைந்து வந்தனர். ஆனால் வாலிபர் தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து அம்ருதஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எலகங்கா அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்த மஞ்சுநாத் (வயது 28) என்பவரை கைது செய்தனர். கடந்த 7-ந் தேதி மதுவிருந்தை முடித்துவிட்டு வரும்போது இளம்பெண்ணுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.