இமாசல பிரதேசத்தில் 2 அரசு பஸ்கள் தீ வைப்பு - இளைஞர் கைது

விசாரணையில் இளைஞர் மதுபோதையில் இந்த செயலை செய்ததாக தெரியவந்துள்ளது
சிம்லா,
இமாசல பிரதேச மாநிலம், பைஜ்நாத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி அருகே ஹிமாசல அரசு பஸ்சும் , சண்டீகர் அரசு பஸ்சும் நிறுத்தப்பட்டிருந்தன. வாகன ஓட்டுநகர்கள் அருகிலுள்ள அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், சம்பவத்தன்று நிறுத்தப்பட்டிருந்த பஸ்கள் இரண்டும் திடீரென தீப்பிடித்து எரிந்தன. இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனிடையே அங்கிருந்தவர்கள் தீயினை அணைக்க முயற்சித்தனர். இருப்பினும் அரசு பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலாயின.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அடையாளம் தெரியாத ஒருவர் வேண்டுமென்றே வாகனங்களுக்கு தீ வைத்ததாக சந்தேகித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து பைஜ்நாத் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் பர்வானா தார் கிராமத்தைச் சேர்ந்த சுஷாந்த் என்பவர் சிக்கினார். இதனையடுத்து சுஷாந்த்தை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இவர் மதுபோதையில் இந்த செயலை செய்ததாக தெரியவந்துள்ளது.






