கணவரை விஷம் வைத்து கொன்ற தலைமை ஆசிரியை... அடுத்து நடந்த பயங்கரம்

கணவர் தினமும் மது குடித்துவிட்டு வந்து தலைமை ஆசிரியையை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
மும்பை,
மராட்டிய மாநிலம் யவத்மால் மாவட்டம் சவுசாலா வனப்பகுதியில் கடந்த 15-ந்தேதி பாதி எரிந்த நிலையில் ஆண் உடல் மீட்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் பிணமாக மீட்கப்பட்டவர் யவத்மால் சுயோக்நகரை சேர்ந்த ஆசிரியர் சாந்தனு அரவிந்த் தேஷ்முக்(வயது32) என்பது தெரியவந்தது.
அவரை கொலை செய்தது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் போலீசார் ஆசிரியரின் மனைவி நிதி தேஷ்முக்கிடம்(24) விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, ஆசிரியர் சாந்தனு அரவிந்த் தேஷ்முக்கும், நிதி தேஷ்முக்கும் காதலித்து திருமணம் செய்தவர்கள். இதனால் இரு வீட்டாரின் ஆதரவு இன்றி 2 பேரும் தனியாக வசித்து வந்தனர். ஆரம்பத்தில் 2 பேரின் திருமண வாழ்க்கையும் வசந்தமாக இருந்தது. சாந்தனு அரவிந்த் தேஷ்முக் ஆசிரியராக வேலை செய்த பள்ளியில், மனைவி நிதி தேஷ்முக் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
ஆசிரியர் தம்பதியாக வலம் வந்த இவர்கள் மீது யார் கண் விழுந்ததோ தெரியவில்லை. ஆசிரியர் மது பழக்கத்துக்கு அடிமை ஆனார். தினமும் மது குடித்துவிட்டு வந்து அவர் மனைவியை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த மனைவி, கணவரை தீர்த்துக்கட்டும் குரூர முடிவுக்கு வந்தார். ஆன்லைனில் தேடிப்பார்த்து விஷ மாத்திரைகள் குறித்து தெரிந்து கொண்டார்.
கடந்த 13-ந்தேதி அவர் சத்து மாத்திரைகள் எனக்கூறி விஷ மாத்திரையை கணவருக்கு கொடுத்தார். அதை சாப்பிட்ட கணவர் பரிதாபமாக உயிரிழந்தார். தனியாக உடலை எப்படி அப்புறப்படுத்துவது என நினைத்த நிதி தேஷ்முக், தனக்கு உதவி செய்யுமாறு தன்னிடம் டியூசன் படிக்கும் சிறுவர்களிடம் உணர்ச்சிப்பூர்வமாக பேசியுள்ளார். அவரின் பேச்சில் விழுந்த சிறுவர்கள் 3 பேர் உடலை அப்புறப்படுத்த உதவி செய்தனர். சம்பவத்தன்று அவர், சிறுவர்கள் உதவியுடன் சவுலாசா வனப்பகுதியில் கணவரின் உடலை வீசினார்.
கணவரின் உடல் போலீசுக்கு கிடைத்தாலும், அடையாளம் கண்டுபிடிக்கக்கூடாது எனக்கருதிய தலைமை ஆசிரியை மறுநாள் இரவு மீண்டும் சிறுவர்களுடன் வனப்பகுதிக்கு சென்றார். அப்போது அவர் கணவரின் உடலை பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்து விட்டு வீடு திரும்பியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. எனினும் போலீசார் உடலில் எரியாமல் இருந்த சட்டை துணியை வைத்து துப்பு துலக்கினர். அவர் ஆசிரியர் சாந்தனு அரவிந்த் தேஷ்முக் என அடையாளம் கண்டனர்.
இதையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கணவரை கொலை செய்து உடலை காட்டில் வீசி தீவைத்து எரித்த பள்ளி தலைமை ஆசிரியை நிதி தேஷ்முக்கை கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த 3 சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.