அம்மனுக்கு படைத்த தேங்காயை பெறும் விவகாரத்தில் பெண் படுகொலை - உறவினர் வெறிச்செயல்

கடந்த 5 ஆண்டுகளாக கோவிலில் வைத்து பூஜிக்கப்படும் தேங்காய் மற்றும் பழங்களை பாக்யஸ்ரீ பெற்று வந்தார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் ஜோய்டா தாலுகா சிங்கரகாவா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட அமேசத் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்யஸ்ரீ. இவரது உறவினர் தொண்டுவரகா. அதாவது பாக்யஸ்ரீக்கு தொண்டுவரகா, மாமா உறவுமுறை என்று கூறப்படுகிறது. பாக்யஸ்ரீக்கு திருமணமாகி கணவர் மற்றும் 4 மகன்களுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் இக்கிராமத்தில் ஒரு அம்மன் கோவில் அமைந்துள்ளது. அங்கு அம்மனுக்கு வைத்து பூஜிக்கப்படும் தேங்காய் மற்றும் வாழைப்பழங்களை கோவில் நிர்வாகத்தார் பாக்யஸ்ரீயின் குடும்பத்துக்கு கொடுத்து வந்தனர். அதன்பேரில் கடந்த 5 ஆண்டுகளாக கோவிலில் வைத்து பூஜிக்கப்படும் தேங்காய் மற்றும் பழங்களை பாக்யஸ்ரீ பெற்று வந்தார்.
ஆனால் இதற்கு தொண்டு வரகா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து ஊர் பஞ்சாயத்தார் முன்னிலையில் இப்பிரச்சினை குறித்து பஞ்சாயத்து நடந்தது. அப்போது ஊர் பஞ்சாயத்தார் பாக்யஸ்ரீக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினர். அதாவது கோவிலில் வழங்கப்படும் முதல் மரியாதையும், அம்மனுக்கு படைத்து பூஜிக்கப்படும் தேங்காய்கள் மற்றும் வாழைப்பழங்களும் பாக்யஸ்ரீ குடும்பத்தாருக்கு தான் சொந்தம் என்று கூறினர். இதனால் தொண்டுவரகா ஆத்திரத்தில் இருந்தார்.
இந்த நிலையில் இப்பிரச்சினைதொடர்பாக தொண்டு வரகாவுக்கும், பாக்யஸ்ரீக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த தொண்டுவரகா உருட்டு கட்டையால் பாக்யஸ்ரீயின் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த பாக்யஸ்ரீ ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அதையடுத்து தொண்டுவரகா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுபற்றி அறிந்த ஜோய்டா புறநகர் போலீசார் விரைந்து வந்து பாக்யஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய தொண்டுவரகாவையும் வலைவீசி தேடி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.