ரெயிலில் எலெக்ட்ரிக் கெட்டில் வைத்து நூடுல்ஸ் சமைத்த பெண் - ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை


ரெயிலில் எலெக்ட்ரிக் கெட்டில் வைத்து நூடுல்ஸ் சமைத்த பெண் - ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை
x

ரெயில் பயணத்தின்போது எலெக்ட்ரிக் கெட்டில் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

ரெயிலில் டீ போடும் சாதனத்தை(எலெக்ட்ரிக் கெட்டில்) வைத்து நூடுல்ஸ் சமைத்த பெண் தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில், ரெயிலில் ஏ.சி. வகுப்பு பெட்டியில் பயணம் செய்யும் நடுத்தர வயது பெண் ஒருவர், இருக்கையில் அமர்ந்தபடி செல்போன் சார்ஜிங் போட பயன்படுத்தும் பிளக் பாயிண்டில் எலெக்ட்ரிக் கெட்டில் சாதனத்தை இணைத்து சமைக்கத் தொடங்குகிறார்.

இதனை அங்கிருந்த சக பயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். வீடியோவில் அந்த பெண் மராத்தி மொழியில், “இந்த சாதனத்தை பயன்படுத்தி 10 பேருக்கு டீ போட்டுக் கொடுத்திருக்கிறேன்” என்று கூறுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், பலரும் பெண் பயணியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், ரெயில்வே நிர்வாகம் இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட வீடியோவில் இருக்கும் பெண் பயணியை கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ரெயில்வே சட்டத்தின் பிரிவு 147(1)-ன் கீழ் அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய ரெயில்வே நிர்வாகம் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ரெயில் பயணத்தின்போது எலெக்ட்ரிக் கெட்டில் போன்ற சாதனங்களை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் தீவிபத்து உள்ளிட்ட ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பயணிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story