டிரம்ப்பின் 50 சதவீத வரி விதிப்பால் இந்திய பொருளாதாரம் ஆட்டம் காணுமா?

கோப்பு படம்
வங்காளதேசத்துக்கு வரியை 20 சதவீதமாகவும், பாகிஸ்தானுக்கு 19 சதவீதமாகவும், இலங்கைக்கு 20 சதவீதமாகவும் அமெரிக்கா குறைத்துள்ளது.
புதுடெல்லி,
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்தே பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். உள்நாட்டிற்குள் எடுக்கப்பட்டு வந்த அந்த நடவடிக்கை தற்போது உலக நாடுகள் மீதும் பாயத் தொடங்கியிருக்கிறது.
அதுவும் அமெரிக்காவுக்கு ஆதரவான நாடுகளுக்கு வரியை குறைத்தும், எதிரான நாடுகளுக்கு வரியை உயர்த்தியும் அதிபர் டிரம்ப் அதிரடி காட்டி வருகிறார். அந்த வகையில், அமெரிக்காவின் பொருளாதார தடையில் சிக்கியுள்ள ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிவரும் இந்தியாவை அச்சுறுத்தும் வகையில், இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீதமாக வரியை உயர்த்தி டிரம்ப் அறிவித்துள்ளார். அவரது இந்த கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கையால், சீனா, வியட்நாம், வங்காளதேசத்தை விட அதிக வரி விதிப்புக்கு உள்ளான நாடாக இந்தியா மாறியிருக்கிறது.
இதனால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஆண்டுக்கு ரூ.7.5 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி பெரிதும் பாதிக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்தியாவில் பின்னலாடை ஏற்றுமதியில் தமிழ்நாட்டில் உள்ள திருப்பூர் முதலிடத்தில் உள்ளது. இங்கிருந்து அதிக அளவிலான பின்னலாடை அமெரிக்காவுக்குத்தான் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மொத்த ஏற்றுமதியில் 34 சதவீத பங்களிப்பாக இது உள்ளது.
கடந்த நிதியாண்டில் (2024-25) அமெரிக்காவுக்கு மட்டும் ரூ.22 ஆயிரத்து 486 கோடிக்கு பின்னலாடை ஏற்றுமதி நடந்துள்ளது. அந்த பின்னலாடைக்கு தற்போது இறக்குமதி வரி 16.50 சதவீதம், டேரிப் 25 சதவீதம் என வரியை 41.50 சதவீதமாக அமெரிக்கா உயர்த்தியுள்ளது. அதே நேரத்தில், நமது போட்டி நாடுகளான வங்காளதேசத்துக்கு வரியை 20 சதவீதமாகவும், பாகிஸ்தானுக்கு 19 சதவீதமாகவும், இலங்கைக்கு 20 சதவீதமாகவும் அமெரிக்கா குறைத்துள்ளது.
இதனால், இந்தியா கடும் நெருக்கடியை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. இந்தியா ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பை எதிர்கொள்ள பிற நாடுகளுடனான வர்த்தகத் தொடர்பை இந்தியா வலுப்படுத்தினாலே போதும் என்று வர்த்தக நிபுணர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.
தற்போதைய அமெரிக்க வரி விதிப்பு நடவடிக்கையால் இந்த ஆண்டுக்கான திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி ஆர்டர்கள் பாதிக்கப்படும் என்று உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதேபோல், நாமக்கல்லில் இருந்து அமெரிக்காவுக்கு கப்பல் மூலம் அனுப்பப்படும் 1 கோடியே 20 லட்சம் எண்ணிக்கையிலான முட்டை ஏற்றுமதியும் தடைபட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், தமது கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கையால், அமெரிக்க நிறுவனங்களை வெளிநாட்டு போட்டிகளில் இருந்து பாதுகாத்து உள்நாட்டு உற்பத்தி, வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று நம்புகிறார். ஆனால், டிரம்பின் இந்த நடவடிக்கை அமெரிக்காவில் வர்த்தக பாதிப்பை ஏற்படுத்துவதுடன், விலைவாசி உயர்வுக்கும் வழிவகுக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அதை உறுதிப்படுத்தும் வகையில், அமெரிக்காவில் தற்போது பணவீக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. அதே நேரத்தில், இந்திய பொருளாதார நிபுணர்கள், "டிரம்பின் மிரட்டலுக்கு நாம் அஞ்சத் தேவையில்லை. அமெரிக்கா மட்டுமே நமது வர்த்தக பங்குதாரர் அல்ல. பல நாடுகள் இருக்கின்றன. அதனால் நாம் பயப்படத் தேவையில்லை" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தற்போது, பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் இந்தியா, ஜப்பானை பின்னுக்குத்தள்ளி 4-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. 2027-ம் ஆண்டு இந்தியா மேலும் முன்னேறி 3-வது இடத்தை பிடிக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். எனவே, அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் ஆட்டம் காணுமா?, அல்லது பிற நாடுகளுடனான வர்த்தக உறவை வலுப்படுத்தி அதை சரிசெய்யுமா? என்பது மத்திய பா.ஜ.க. அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கையை பொறுத்தே தெரியும்.