கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி புள்ளி விவரம் எவ்வளவு...?


கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி புள்ளி விவரம் எவ்வளவு...?
x

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி புள்ளி விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருட்கள் மற்றும் சேவையின் ஏற்றுமதி மதிப்பு 69.16 பில்லியன் அமெரிக்க டாலர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2024-ல் நாட்டின் ஒட்டுமொத்த பொருட்கள் மற்றும் சேவையின் ஏற்றுமதி மதிப்பு 63.25 பில்லியன் டாலராக இருந்தது. இதை கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் ஏற்றுமதி 9.34 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

இதில், வணிகப் பொருட்களின் ஏற்றுமதி 2024 ஆகஸ்ட்டில் 32.89 பில்லியன் டாலராக இருந்தது. 2025 ஆகஸ்ட்டில் இது 35.10 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதேபோல், சேவைகளின் ஏற்றுமதி 2024 ஆகஸ்ட்டில் 30.36 பில்லியன் டாலராக இருந்து, 2025 ஆகஸ்ட்டில் 34.06 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

வணிகப் பொருட்கள் மற்றும் சேவைகளின் இறக்குமதி 2025 ஆகஸ்ட்டில் 79.04 பில்லியன் டாலராக உள்ளது. இது 2024 ஆகஸ்ட்டில் 84.99 பில்லியன் டாலராக இருந்தது. 2024 ஆகஸ்ட்டில் இருந்த வர்த்தக பற்றாக்குறை 21.73 பில்லியன் டாலராக இருந்த நிலையில், 2025 ஆகஸ்ட்டில் அது 9.88 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.

இதைபோல, கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஏற்றுமதி இறக்குமதி குறித்த புள்ளி விவரங்களில் 2025, ஏப்ரல்-ஆகஸ்ட்ல் வணிகப் பொருட்களின் ஏற்றுமதி 184.13 பில்லியன் டாலராகவும், சேவைகளின் ஏற்றுமதி 165.22 பில்லியன் டாலராகவும் மொத்தம் 349.35 பில்லியன் டாலராகவும் உள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் வணிகப் பொருட்களுக்கான ஏற்றுமதி 179.60 பில்லியன் டாலராகவும், சேவைகளின் ஏற்றுமதி 149.43 பில்லியன் டாலராகவும் மொத்த ஏற்றுமதி 329.03 பில்லியன் டாலராகவும் இருந்துள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த நிதி ஆண்டில் இதுவரை ஏற்றுமதி 6.18% வளர்ச்சி கண்டுள்ளது.

நடப்பு நதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் பொருட்களின் இறக்குமதி 306.52 பில்லியன் டாலராகவும், சேவைகளின் இறக்குமதி 84.25 பில்லியன் டாலராகவும் உள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் பொருட்களின் இறக்குமதி 300.12 பில்லியன் டாலராகவும், சேவைகளின் இறக்குமதி 81.18 பில்லியன் டாலராகவும் இருந்துள்ளது. இதன்மூலம், இறக்குமதி இந்த நிதி ஆண்டில் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஏற்றுமதி அதிகரித்திருப்பதாலும் இறக்குமதி குறைந்திருப்பதாலும் வர்த்தக பற்றாக்குறை 41.42 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இது கடந்த நிதி ஆண்டில் 52.27 பில்லியன் டாலராக இருந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story