மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேறியது: நள்ளிரவு வரை விவாதம்


தினத்தந்தி 3 April 2025 12:23 AM IST (Updated: 3 April 2025 5:24 AM IST)
t-max-icont-min-icon

மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேறியது. வாக்கெடுப்புக்காக நாடாளுமன்ற கூட்டம் நள்ளிரவை தாண்டியும் நடைபெற்றது.

புதுடெல்லி,

இந்திய அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வக்பு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்துள்ள நிலையில், பா.ஜனதா தனக்கிருக்கும் பெரும்பான்மையை பயன்படுத்தி இந்த திருத்த மசோதாவை தாக்கல் செய்தது. இந்த மசோதாவிற்கு இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையில் இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. 12 மணி நேரம் விவாதம் நடைபெற்ற நிலையில் நள்ளிரவு 12 மனியளவில் மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே வாக்கெடுப்பு நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு மேல் வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், மசோதா நிறைவேறியதாக நள்ளிரவு 2 மணிக்கு அறிவிப்பு வெளியானது. மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் கிடைத்தன. மக்களவையில் நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையில் இந்த சட்ட திருத்த மசோதா இனி தாக்கல் செய்யப்பட உள்ளது.

மக்களவையில் பாஜக பலம்

பாஜகவிற்கு மக்களவையில் தற்போதுள்ள 542 உறுப்பினர்களில் 293 உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது. பா.ஜனதாவுக்கு மட்டும் 240 உறுப்பினர்கள் உள்ளனர். கூட்டணி கட்சிகளில் 53 பேர் உள்ளனர். மாநிலங்களவையிலும் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை கிடைக்கும். ஏனெனில் 98 பா.ஜனதா உறுப்பினர்கள் உள்பட 123 பேர் பா.ஜனதா கூட்டணியில் உள்ளனர். பெரும்பான்மைக்கு 119 போதும். ஏனென்றால் அவையின் தற்போதைய மொத்த எண்ணிக்கை 236 ஆகும்.


Next Story