சத்தீஷ்காரில் நிலக்கரி சுரங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை

போராட்டக்காரர்கள் நிலக்கரி சுரங்க ஆலைக்குள் நுழைந்து அங்கிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர்.
ராய்ப்பூர்,
சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டம் தம்னார் பகுதியில் நிலக்கரி சுரங்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 14 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கூடாரங்கள் அமைத்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில், சுமார் 300 போராட்டக்காரர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் ஏராளமான கிராம மக்களும் இணைந்ததால், சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். நிலக்கரி சுரங்கப் பணிக்கான வாகனங்களை அவர்கள் தடுத்து நிறுத்தினர்.
அப்போது போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீஸ் தடுப்புகளை உடைத்துக் கொண்டு போராட்டக்காரர்கள் முன்னேறினர். இதில் போலீசார் மீது கற்களை வீசியும், தடிகளால் தாக்கியும் இருந்தனர். ஒரு போலீஸ் வாகனம், ஒரு ஜீப் மற்றும் ஒரு ஆம்புலன்சுக்கு தீ வைக்கப்பட்டது. பல அரசு வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. பின்னர் போராட்டக்காரர்கள் நிலக்கரி சுரங்க ஆலைக்குள் நுழைந்து அங்கிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர்.
மேலும் அலுவலகத்தையும் சூறையாடினர். இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களின் கற்கள் வீச்சில் பல போலீசார் காயமடைந்தனர். இதுதொடர்பாக கிராம மக்கள் கூறுகையில், சுரங்கப் பணிகளுக்கான வாகனங்களைத் தடுத்து சாலையில் அமர்ந்திருந்த பெண்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால்தான் வன்முறை ஏற்பட்டதாக தெரிவித்தனர்.






