அமெரிக்கா-சீனா வரிப் போர்.. இது பொன்னான வாய்ப்பு: இந்தியாவுக்கு பொம்மை உற்பத்தியாளர்கள் கோரிக்கை

பொம்மைகளுக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்தியதால் அந்த நாட்டிற்கு சீனாவின் பொம்மை ஏற்றுமதி பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா:
அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு கொள்கை, உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. டிரம்பின் நடவடிக்கைக்கு பதிலடியாக சீனாவும் வரிகளை உயர்த்தியது. அதற்கு ஏற்ப டிரம்பும் வரிகளை உயர்த்தி மிரட்டல் விடுத்தார். இவ்வாறு மாறி மாறி இரு நாடுகளும் இறக்குமதி பொருட்கள் மீதான வரிகளை உயர்த்தியதால் வரிப் போர் உச்சத்தை எட்டி உள்ளது.
தற்போதைய நிலையில் சீனப் பொருட்கள் மீது அமெரிக்காவின் வரி 145 சதவீதமாக உள்ளது. அதேபோல் சீனாவில் அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரி 125 சதவீதமாக உள்ளது.
விலை உயரும் அபாயம்
சீனா மீது அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரிகளால் சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் அமெரிக்காவில் பன்மடங்கு விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சீன பொம்மைகளின் விலை தாறுமாறாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் அமெரிக்காவின் மொத்த பொம்மை இறக்குமதியில் சீனா மட்டும் 77 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. இப்போது பொம்மைகளுக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்தியதால் அந்த நாட்டிற்கு சீனாவின் பொம்மை ஏற்றுமதி பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் மற்ற நாடுகளுக்கான ஏற்றுமதி வாய்ப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவும் அமெரிக்காவுக்கான பொம்மை ஏற்றுமதியை கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
உலகளாவிய பொம்மை ஏற்றுமதி மையமாக இந்தியா உருவாவதற்கான பாதையை இந்த வரிப் போர் திறந்துள்ளதாகவும், இது இந்தியாவுக்கு பொன்னான வாய்ப்பு என்றும் பொம்மை உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
மிகப்பெரிய வாய்ப்பு
இதுகுறித்து இந்திய பொம்மை உற்பத்தியாளர் சங்க தலைவர் அக்சய் பிஞ்ச்ராஜ்கா கூறியதாவது:-
அமெரிக்கா-சீனா இடையிலான வரிப் போரினால் உருவாகி வரும் வெற்றிடத்தை நிரப்ப இந்தியா நல்ல நிலையில் உள்ளது. சுமார் 41.7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அமெரிக்க பொம்மை சந்தை, இந்திய உற்பத்தியாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை வழங்குகிறது. இந்திய தயாரிப்புகள் இப்போது தரம் மற்றும் விலை இரண்டிலும் சீன தயாரிப்புகளுடன் போட்டிபோட்டு வர்த்தகம் செய்ய முடியும்.
ஒரு காலத்தில் இறக்குமதியை சார்ந்திருந்த இந்திய பொம்மைத் துறை இப்போது முன்னேறி உள்ளது. உள்நாட்டு உற்பத்தியாளர்கள் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளனர். மேலும் உலகளாவிய சந்தைகளை இலக்காகக் கொண்டு, இந்த துறை வளர்ந்து வருகிறது.
எச்சரிக்கை
கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், விலை குறைவான மற்றும் சட்டவிரோதமாக வரக்கூடிய சீன பொம்மைகள் இந்திய சந்தையில் குவிந்து வருகின்றன. அமெரிக்காவின் அதிகப்படியான வரிகளுக்குப் பிறகு சீன பொம்மைகள் வரத்து மேலும் அதிகரிக்கக்கூடும். இது உள்நாட்டு உற்பத்தி மற்றும் லாபத்தை பாதிக்கும்.
எனவே, மத்திய அரசு இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். துறைமுகங்களில் சோதனைகளை கடுமையாக்க வேண்டும். தரமற்ற பொம்மைகள் இந்திய சந்தைக்குள் நுழைவதை தடுக்க இந்திய தரநிலைகள் அமைப்பு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மம்தாவுக்கு கோரிக்கை
இந்தியாவில் மேற்கு வங்காள மாநிலம் பொம்மை உற்பத்தி மையமாக மாறுவதற்கு தேவையான உற்பத்தி இடவசதிகள், துறைமுக போக்குவரத்து தொடர்பு, தளவாடங்கள், மூலப்பொருட்கள் மற்றும் உழைப்பு என அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. ஆனால் மாநில அரசாங்கத்திடம் இருந்து அதற்கான இறுதிக்கட்ட முயற்சி இன்னும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, பொம்மை உற்பத்தியாளர்களின் நீண்டகால கோரிக்கையான, பிரத்யேக கிளஸ்டரை உருவாக்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நடவடிக்கை எடுக்க வேண்டும். குறு சிறு நடுத்தர தொழில்களில் மிகப்பெரிய துறையான பொம்மைத் துறை மூலம், மேற்கு வங்காளத்தில் முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகள் கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவின் பொம்மை ஏற்றுமதி ஏற்கனவே அதிகரித்துள்ளது. 2014-15 நிதியாண்டில் 40 மில்லியன் டாலர் என்ற அளவில் இருந்த பொம்மை ஏற்றுமதி, 2023-24 நிதியாண்டில் 152 மில்லியன் டாலர்களாக அதிகரித்தது. அதேசமயம், சீனாவிலிருந்து இந்தியாவுக்கான பொம்மை இறக்குமதி குறைந்துள்ளது. 2020ம் நிதியாண்டில் 235 மில்லியன் டாலர் என்ற அளவில் இருந்து 2024ம் நிதியாண்டில் 41 மில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. இந்தியா, இறக்குமதி பொருட்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த பிறகும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்த பிறகும் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.